ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள பில்லவார் பகுதியில் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் நேற்று பாதுகாப்புப் படையினர், போலீஸார் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலை ஒரு மறைவிடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபடி தப்பிவிட்டனர்.
இதையடுத்து பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பில்லவார் பகுதியில் கமாத் நல்லா, காலாபான், தானு பரோல் ஆகிய இடங்களில் இருந்த தீவிரவாதிகளின் மறைவிடங்களை பாதுகாப்புப் படையினர் தகர்த்து அழித்தனர்.
அந்த இடங்களில் இருந்து வெடிபொருட்கள், உலர்பழங்கள், நெய் அடங்கிய பிளாஸ்டிக் டப்பா, கையுறைகள், தொப்பி, போர்வை, தார்ப்பாய் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கதுவா மாவட்ட மூத்த போலீஸ் எஸ்.பி. மோஹித்தா சர்மா தலைமையில் போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.