
படங்கள்: ர.செல்வமுத்துகுமார்
திருச்சி மாவட்டத்தின் முதலாவது ஜல்லிக்கட்டு சூரியூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 620 காளைகள் பங்கேற்றன. அவற்றை அடக்க 334 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.
போட்டியில் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், மாடுபிடி வீரர்களால் பிடிக்கப்படாத மாடுகளுக்கும் கார், பைக், மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ, தங்க காசு, வெள்ளி காசு, ரொக்கம் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் கார்த்திக், ஊர்க்காவல் படை வீரர் கங்காதரன் மற்றும் 13 மாடுபிடி வீரர்கள், 26 மாடு உரிமையாளர்கள், 22 பார்வையாளர்கள் என 63 பேர் காயமடைந்தனர்.
போட்டியின் முடிவில் 12 காளைகளை அடக்கிய திருச்சி பெரிய சூரியூரைச் சேர்ந்த மூர்த்திக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கார் பரிசாக வழங்கினார்.
11 காளைகளை அடக்கிய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த யோகேந்திரன், 7 காளைகளை அடக்கிய புதுக்கோட்டை மாவட்டம், நல்லதங்காள் பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.