கோட்டயம்: பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டப் போராட்டத்தை எதிர்கொண்ட 3 கன்னியாஸ்திரிகள் சிறிய ஆடைத் தொழில் மூலம் தங்களது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளனர்.
கேரளாவின், கோட்டயம் மாவட்டத்திலுள்ள குருவிலங்காடு மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், ஜலந்தர் மறைமாவட்ட ஆயராக இருந்த பிராங்கோ முலக்கல், தன்னை 2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2018 ஜூன் மாதம் போலீஸில் புகார் அளித்தார்.
திருச்சபை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக, மேலும் 2 கன்னியாஸ்திரிகள் கொச்சியில் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தினர். அதன் பிறகு, 2018 செப்டம்பரில் பிராங்கோ முலக்கல் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்தியாவில் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் கத்தோலிக்க ஆயர் இவர் ஆவார்.
இந்நிலையில், 3 கன்னியாஸ்திரி்களும் சேர்ந்து ஆடைத் தொழில் மூலம் தங்களது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: ஆயர் பிராங்கோ மீதான குற்றச்சாட்டு வெளியானதையடுத்து, மடத்தில் எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தப்பட்டது.
இதனால், உணவு, உடை, மருந்து ஆகியவற்றை வாங்க, வேலை செய்து சம்பாதிக்க நாங்கள் முடிவு செய்தோம். எங்களில் இருவர் சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளனர். வேலைக்காக முயற்சி செய்தபோது சட்ட வழக்குடன் இருந்த தொடர்பு காரணமாக, வேலை கிடைப்பது கடினமாக இருந்தது.
அப்போதுதான் வேலை கிடைப்பது எளிதல்ல என்பதைப் புரிந்துகொண்டோம். எனவே, யாராலும் எங்களிடமிருந்து பறிக்க முடியாத ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். குருவிலங்காடு மடத்தில் அதற்கான விடை ஒரு தையல் இயந்திரம் மூலம் கிடைத்தது. கற்றுக் கொள்வதற்காக தொடங்கிய தையல் பயிற்சி, தற்போது எங்களது வாழ்வாதாரமாக மாறியுள்ளது.
தற்போது, ஆடைத் தொழிலை தொடங்கி உள்ளோம். தொடக்கத்தில் இந்தத் தொழில் சிறிய அளவிலேயே இருந்தது. நன்கு அறிமுகமானவர்களிடமிருந்தே பெரும்பாலான ஆர்டர்கள் வந்தன. பலர் எங்களுக்கு ஆதரவு அளித்தனர். அவர்களின் பரிந்துரையின் பேரில், எங்களது தொழிலுக்கு ‘ஸ்டாண்ட் பை மீ’ என பெயர் சூட்டியுள்ளோம்.
தற்போது நைட்டிகள், சுடிதார்கள், பைகள், மேஜை விரிப்புகள் மற்றும் மேஜை அலங்காரத் துணிகள் உள்ளிட்டவற்றை தயாரித்து வருகிறோம். மேலும், இரு பணியாளர்களையும் வேலைக்கு அமர்த்தியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, உள்ளூர் நீதிமன்றத்தால் பிராங்கோ விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பாதிக்கப்பட்ட அந்த கன்னியாஸ்திரி கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.