போபால்: மத்திய பிரதேச அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய 3 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மத்திய பிரதேச அரசு சார்பில் மாநிலம் முழுவதும் 783 சஞ்சீவினி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. சஞ்சீவினி மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 2,000-க் கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.80,000 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தமோ நகரில் செயல்படும் சஞ்சீவினி மருத்துவமனையில் போலி மருத்துவர்கள் பணியாற்றி வருவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மத்திய பிரதேச சுகாதாரத் துறை மற்றும் காவல் துறை இணைந்து தமோ பகுதி சஞ்சீவனி மருத்துவமனைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக பணியாற்றிய குமார் சச்சின் யாதவ், ராஜ்பால் கவுர், அஜய்மவுரியா ஆகியோர் போலி மருத்துவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட் டனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கைதான போலி மருத்துவர்கள் ரூ.10 லட்சம் கொடுத்து போலி எம்பிபிஎஸ் சான்றிதழை பெற்று உள்ளனர். 3 போலி மருத்துவர்களும் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மருத்துவர்களாக பணியாற்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து உள்ளனர்.
தமோ பகுதியைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சஞ்சீவினி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்ட விசாரணையில் 10 மாவட்டங்களை சேர்ந்த சஞ்சீவனி மருத்துவமனைகளில் 14 போலி மருத்துவர்கள் பணியாற்றுவது கண்டறியப்பட்டு உள்ளது.
அவர்களில் சிலர் பணியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளனர். சிலர் பணிக்கு வரவில்லை. 14 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் 80 மருத்துவர்களின் எம்பிபிஎஸ் சான்றிதழ்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு மத்திய பிரதேச சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக மத்திய பிரதேச போலீஸ் மூத்த அதிகாரி அலோக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: தேசிய சுகாதார திட்ட அதிகாரிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் போலி மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் மூத்த மருத்துவர்களின் பதிவெண்களை பயன்படுத்தி போலி எம்பிபிஎஸ் சான்றிதழ்களை தயாரித்து உள்ளனர்.
சிலர் ஆயுர்வேதம், சித்தா மருத்துவப் படிப்புகளை படித்துவிட்டு போலி எம்பிபிஎஸ் சான்றிதழ்களை ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சத்துக்கு வாங்கி உள்ளனர்.
இவர்களுக்கு போலி எம்பிபிஎஸ் சான்றிதழ்களை தயாரித்து கொடுத்தது யார், தேசிய சுகாதார திட்டத்தில் இவர்களை பணியில் சேர்த்தது யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இந்த மோசடியில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு போலீஸ் மூத்த அதிகாரி அலோக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.