புதுடெல்லி: மேற்கு ஆசிய போர் காரணமாக 26,000 சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஆன்டோ அந்தோனி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு சிவில் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா, ஈரான் இடையே போர் மூண்டது. இதையடுத்து, மேற்கு ஆசிய வான் பகுதியில் விமானங்கள் பறக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதனால் ஜூலை 20-ம் தேதி வரையில் இந்திய விமான நிறுவனங்கள் சுமார் 26,000 சர்வதேச விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. மேலும், பல விமானங்கள் மாற்று வழிகளில் திருப்பி விடப்பட்டும், தாமதமாகவும் இயக்கப்பட்டு வருகின்றன .
இதற்கிடையே இந்தப் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வால் விமான எரிபொருள் விலையும் உயர்ந்தது. இதுபோன்ற நெருக்கடியால் விமான நிறுவனங்களுக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இருப்பினும், சேவைகளைத் தொடரத் தேவையான நடவடிக்கைகளை விமான நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.