ஹரியானா மாநிலம் குருகிராமில் நேற்று பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளும் வெள்ள நீரில் மூழ்கின. சுபாஷ் சவுக் பகுதியில் தேங்கிய மழைநீரில் பள்ளிப் பேருந்துகள் மிதந்தபடி மெதுவாகச் சென்றன. படம்: பிடிஐ

 
இந்தியா

டெல்லியில் கனமழையால் 26 விமானங்கள் ரத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தலைநகர் டெல்​லி​யில் நேற்று கனமழை பெய்​த​தால் 397 விமானங்​கள் தாமத​மாக இயக்​கப்​பட்​டதுடன் 26 விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன.

நாடு முழு​வதும் பரு​வ​மழை தீவிரமடைந்​துள்​ளது. தலைநகர் டெல்​லி​யில் நேற்று இடி, மின்​னல், பலத்த சூறாவளிக் காற்​றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்​கியது. குறிப்​பாக தென்​கிழக்​கு, மத்​திய டெல்லி உள்​ளிட்ட நகரின் பல்​வேறு பகு​தி​களில் கொட்​டித்​தீர்த்த மழை​யால் சாலைகளில் நீர் தேங்​கி, நகரம் முழு​வதும் போக்​கு​வரத்து கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டது. மக்​கள் பெரிதும் அவதிக்​குள்​ளாகி​னர்.

இதற்​கிடையே, குரு​கி​ராமில் சோஹ்னா சாலை​யில் இஸ்​லாம்​பூர் கிராமத்​துக்கு அருகே சுமார் இரண்டு அடி உயரத்​துக்கு தண்​ணீர் தேங்​கிய​தால், கிட்​டத்​தட்ட 4 கி.மீ. தூரத்​துக்கு வாக​னங்​கள் ஊர்ந்து செல்​லும் நிலை ஏற்​பட்​டது.

397 விமானங்கள் தாமதம்: கனமழை காரண​மாக டெல்லி இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் 397 விமானங்​கள் தாமத​மாக இயக்​கப்​பட்​டதுடன் 26 விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. மேலும் டெல்லி வரவிருந்த 3 சர்​வ​தேச விமானங்​கள் உட்பட 15 விமானங்​கள் வேறு நகரங்​களுக்​குத் திருப்பி விடப்​பட்​ட​தால், பயணி​கள் கடும் அவதிக்​குள்​ளாகினர். இவற்​றில் 12 விமானங்​கள் ஜெய்ப்​பூருக்​கும், 2 விமானங்​கள் சண்​டிகருக்​கும், ஒரு விமானம் லக்​னோவுக்​கும் திருப்​பி​விடப்​பட்​டன.

நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், சாலை பழுதுபார்க்கும் பணி காரணமாகவும் இன்று பணி​யாளர்​கள் வீட்​டில் இருந்தே பணிபுரி​யு​மாறும், மாணவர்​கள் வீட்​டில் இருந்தே பாடம் கற்​கு​மாறும் அலு​வல​கங்​கள் மற்​றும் பள்​ளி​களுக்கு குரு​கி​ராம் நிர்​வாகம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இந்​திய வானிலை ஆய்வு மையம், டெல்​லி​யின் பெரும்​பாலான மாவட்​டங்​களுக்கு 'ரெட் அலர்ட்' எச்​சரிக்​கை​யும், நொய்​டா, குரு​கி​ராம், பரி​தா​பாத் ஆகிய பகு​தி​களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்' எச்​சரிக்​கை​யும் விடுத்​துள்​ளது. டெல்​லி - தேசிய தலைநகர் பகு​தி, உத்​த​ராகண்ட், ஒடிசா மற்​றும் தெலங்​கானா ஆகிய பகு​தி​களி​லும் தொடர்ந்து கனமழை பெய்​யக்​கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இன்று பிற்​பகலில் லேசான சாரல் மழைக்​கும், நாளை நண்​பகலுக்​குப் பிறகு ஒருசில இடங்​களில் மித​மான மழைக்​கும் வாய்ப்​பு உள்​ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT