புதுடெல்லி: பிரிஹன் மும்பை மாநகராட்சி தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் பாஜக, சிவசேனா (ஷிண்டே) கூட்டணி வெற்றி பெற்றது. பாஜகவைச் சேர்ந்த ரிது தாவ்டே மேயராக சமீபத்தில் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்), இந்த தேர்தலில் வெற்றி பெற்ற 227 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: ”மும்பை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களில் 54 பேர் (24%) தங்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர். 29 பேர் (13%) தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறியுள்ளனர்.
180 பேர் (79%) தங்களுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதேநேரம் வெற்றி பெற்றவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.7.18 கோடியாக உள்ளது. கவுன்சிலர்களில் 60% பேர் பெண்கள். 50% பேர் குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்பை முடித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.