புதுடெல்லி: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அயர்லாந்தின் ஷானன் நகரில் தவித்துக் கொண்டிருந்த ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் வியாழக்கிழமை அதிகாலை தலைநகர் டெல்லியை வந்தடைந்தது.
கடந்த திங்கள்கிழமை, நியூயார்க்கிலிருந்து டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்த ஏர் இந்தியாவின் ‘ஏ350’ ரக விமானம் (AI102), திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அயர்லாந்தின் ஷானன் நகருக்குத் திருப்பிவிடப்பட்டது. அங்கு விமானம் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிலிருந்த 220-க்கும் மேற்பட்ட பயணிகளும் ஊழியர்களும் அங்கேயே தவிக்கும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், பயணிகளை அழைத்து வர சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரிலிருந்து ‘போயிங் 787’ ரக சிறப்பு விமானம் ஷானன் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விமானம் புதன்கிழமை பிற்பகல் இந்திய பயணிகளை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு, வியாழக்கிழமை அதிகாலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
ரூ.20,000 நிதியுதவி பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு நல்லெண்ண அடிப்படையில் தலா ரூ.20,000 கருணைத் தொகையை ஏர் இந்தியா வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.