பெங்களூரு: கர்நாடகாவில் பாகல்கோட்டை, தாவணகெரே தெற்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு வருகிற 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பாகல் கோட்டையில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா பேசியதாவது:
முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் சித்தராமையாவுக்கும் டி.கே.சிவகுமாருக்கும் இடையே பெரிய போரே நடக்கிறது. இதனால் கர்நாடக மக்களுக்கு எந்த நன்மையும் அவர்களால் செய்ய முடியவில்லை. இரண்டாவது முறையாக முதல்வர் பதவி வகிக்கும் சித்தராமையா தனது அதிகாரத்தை தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்தி கொண்டிருக்கிறார். அவரது ஆட்சியில் கர்நாடகா பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகள் அவரது ஆட்சியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த 3 ஆண்டுகளில் 2,809 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக ஆளும் காங்கிரஸ் அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. பயிர்களுக்கு உரிய விலை நிர்ணயிக்காமலும், விலை நிர்ணயித்தாலும் அதனை அமல்படுத்தாமல் இருப்பதாலும் இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. விவசாயிகளின் மரணங்களுக்கு சித்தராமையா உரிய பதிலை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.