வாராணசி: உத்தர பிரதேசம் வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி தொடர்ந்து நான்காவது ஆண்டாக கடந்த 2-ம் தேதி முதல் வரும் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வாராணசி காவல்துறை துணை ஆணையர் சரவணன் தங்கமணி கூறியதாவது:
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் 80,000 முதல் 1 லட்சம் பேர் வரை கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 2 ஆயிரம் போலீஸார் 15 நாட்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதற்காக 3 கம்பெனி ரிசர்வ் போலீஸார், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் நமோ காட் பகுதியை ஒட்டியுள்ள கங்கை நதியில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள 4 அதிவிரைவு படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தப் படகுகள் 8 கி.மீ தூரத்தை 7 நிமிடங்களில் கடந்து செல்லும். பாதுகாப்பு பணியில் 10 ட்ரோன்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு சரவணன் கூறினார்.