இடாநகர்: வடகிழக்கு மாநிலங்களில் சிறுவர்கள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் ஒரு கும்பல் சிறுவர், சிறுமிகளை விலைக்கு வாங்கி வெளிமாநிலங்களுக்கு கடத்த திட்டமிட்டு இருப்பதாக மாநில போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் தலைநகர் இடாநகர் மற்றும் மெச்சுக்கா, ஆலோ, பாசிகாட், நஹர்லாகுன், லாங்டிங் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது 19 சிறுவர், சிறுமியர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில் 3 வயது குழந்தையும் இருந்தது. பெரும்பாலானோர் 8 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுவர், சிறுமியர் அருணாச்சல பிரதேசத்தின் நாம்சாய் நகருக்கு அழைத்து வரப்பட்டு, அவரவர் பெற்றோர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “வறுமையில் வாடும் குடும்பங்களிடம் இருந்து ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை பணம் கொடுத்து சிறுவர், சிறுமிகளை கடத்தல் கும்பல் விலைக்கு வாங்கி உள்ளது. சில சிறுவர்களை கடத்தி வந்துள்ளனர்.
இவர்களை வெளிமாநிலங்களுக்கு கடத்திச் சென்று ஓட்டல்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்த அந்த கும்பல் திட்டமிட்டிருந்தது. அருணாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளை போலீஸார் ஒன்றிணைந்து செயல்பட்டு 19 பேரை மீட்டுள்ளோம்” என்றனர்.