இந்தியா

இரட்டை கொலை வழக்கில் 16 வயது சிறுவன், தாய் கைது

செய்திப்பிரிவு

பெங்களூரு: பெங்களூருவில் திருமணம் தாண்டிய உறவின் காரணமாக 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 வயது சிறுவன், அவனது தாய் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூருவை அடுத்துள்ள பீனியாவை சேர்ந்தவர் மல்லேஷ் கவுடா (37). இவர் தனது மனைவி யமுனா (35) மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சாயா (35) என்பவருக்கும் திருமணத்தை தாண்டிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

          

நேற்று காலையில் மல்லேஷ் கவுடா, சாயாவை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். இதனை அறிந்த யமுனா தனது சகோதரர் சுதீப் குமாருடன் (33) அங்கு சென்று சாயாவுடன் சண்டை இட்டுள்ளார். அப்போது சுதீப் குமார் சாயாவை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த சாயாவின் மகன் பிரதீப் குமார் (16) வீட்டில் இருந்த கத்தியால் சுதீப் குமாரையும், அவரது சகோதரி யமுனாவையும் சரமாரியாக குத்தினார். இதனால் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பீனியா போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பிரதீப் குமாரையும், அவரது தாயார் சாயாவையும் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரட்டை கொலையின் காரணமாக பீனியா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT