கொல்கத்தா: தேர்தல் தோல்வியை அடுத்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் பெரும்பான்மை எம்எல்ஏ.க்கள் மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனி அணியாக பிரிந்தனர். இந்நிலையில் திரிணமூல் எம்.பி.க்கள் 16 பேர், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியை நேற்று சந்தித்தனர்.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெறும் 80 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்தது. தேர்தல் தோல்விக்குப் பின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட ஆரம்பித்தது. 59 எம்எல்ஏக்கள் மம்தாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனி அணியாக உருவாகினர். பெரும்பான்மை அடிப்படையில் அவர்களில் ரிதப்ரதா பானர்ஜி என்பவருக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து வழங்கப்பட்டது.
இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று டெல்லியில் இருந்தார். அப்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 16 எம்.பி.க்கள் சுகேந்து ரே மற்றும் ககோலி தஸ்திதர் தலைமையில் மாநில முதல்வர் சுவேந்து அதிகாரியை நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பு பாஜக அமைச்சர் ஒருவர் வீட்டில் நடைபெற்றது.
இவர்கள் தங்களை தனி அணியாக மக்களவையில் அமர வைக்கும்படி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இந்த 16 எம்.பி.களில் சேகர் ராய் மட்டும் மாநிலங்களவை உறுப்பினர். மற்ற 15 பேரும் மக்களவை உறுப்பினர்கள். பெரும்பான்மை அடிப்படையில் தனி அணியாக உருவாக 19 மக்களவை உறுப்பினர்கள் தேவை. இல்லையென்றால் கட்சி தாவல் நடவடிக்கையை சந்திக்க நேரிடும்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்கெனவே 23 எம்.பி.க்கள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் தொடர்பில் இருந்தனர். இதனால் இவர்கள் தனி அணியாக உருவாக வாய்ப்புள்ளது. அவ்வாறு தனி அணியாக உருவானால் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிளவுபடுவது உறுதி என கூறப்படுகிறது.
சுகேந்து சேகர் ராஜினாமா: இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி சுகேந்து சேகர் ராய் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு ஊழலிலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலும் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ஆர்.ஜி கர் மருத்துவமனை பாலியல் வன்கொடுமை கொலை சம்பவத்தில் தடயங்கள் அழிக்கப்பட்டதில் போலீஸ் அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரணை நடத்த கோரியதால், தான் கட்சியில் தனிமைப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு: திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 28 எம்.பி.க்கள் தே.ஜ கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. அக்கட்சியின் எம்.பி. ககோலி கோஷ் தாஸ்திதார் என்பவர் கொறடா பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார்.
அதிருப்தியில் இருக்கும் அவர் கூறுகையில், "திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். அதனால் நாங்கள் தே.ஜ.கூட்டணியுடன் இருந்தால் தான் நல்லது. எங்களின் விருப்பத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் முறையாக தெரிவிக்க சுமார் 20 எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளோம்" என்றார்.
மற்றொரு அதிருப்தி பெண் எம்.பி.சர்மிளா சர்கார் கூறுகையில், "நாங்கள் 20 எம்.பி.க்கள் சேர்ந்து தனி அணியாக தே.ஜ. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளோம். ககோலி கோஷ்தான் எங்கள் தலைமை கொறடா. சதாப்தி ராய் எங்களின் துணைத் தலைவர்" என்றார்.