புதுடெல்லி: உ.பி.யில் ஒரு கோழிப்பண்ணையில் 140 கோழிகள் இறந்தது தொடர்பாக இசைக் கச்சேரி நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கச்சேரியின் அளவுக்கு அதிகமான ஓசையால் கோழிகள் மாரடைப்பால் இறந்ததாக காரணம் கூறப்படுகிறது.
உ.பி.யில் திருமண நிகழ்ச்சியின் மாப்பிள்ளை ஊர்வலத்தில் டிஜே எனும் இசைக் கச்சேரி இடம்பெறுவது வழக்கம். இந்நிலையில் உ.பி.யின் சுல்தான்பூர் மாவட்டம், தரியாபூர் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி ஒரு திருமண ஊர்வலம் டிஜே கச்சேரியுடன் நடைபெற்றது. அதில் கிளம்பிய அளவுக்கு மீறிய ஓசை அதன் வழியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கச்சேரியின் ஓசை தாங்காமல் இங்கு 140 கோழிகள் இறந்தன. இது தொடர்பாக தரியாபூர் காவல் நிலையத்தில் கோழிப்பண்ணை உரிமையாளர் சாபீர் அலி, புகார் அளித்தார். இதையடுத்து உயிரிழந்த கோழிகளுக்கான உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் டிஜே இரைச்சல் கோழிகளுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியதாகவும் இதனால் ஏற்பட்ட மாரடைப்பால் 140 கோழிகள் இறந்ததாகவும் தெரியவந்தது.
இதுகுறித்து உடற்கூறு ஆய்வு நடத்திய தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி பிரமோத் சர்மா கூறுகையில், “திருமண ஊர்வலத்தின் டிஜே வாகனம் கோழிப்பண்ணையை கடந்து சென்றபோது, அதிலிருந்து வெளியான உரத்த இரைச்சலும் அதிர்வுகளும் அங்கிருந்த கோழிகளைப் பெரிதும் மிரளச் செய்தது. இந்தத் திடீர் பீதி காரணமாக கோழிகள் மிரண்டுபோய், கண் இமைக்கும் நேரத்தில் 140 கோழிகள் உயிரிழந்துள்ளன.
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த கோழிகளுக்கு, உரத்த இரைச்சலும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தச் சூழலும் தாங்க முடியாமல் போய் உள்ளது. இதுவே கோழிகளின் உயிரிழப்புக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்திருக்கலாம்” என்றார்.
வழக்குப் பதிவு
இந்த உடற்கூறு ஆய்வறிக்கையின் அடிப்படையில் டிஜே இசைக் கச்சேரி நிர்வாகி கவி யாதவ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். வினோதமான இந்தப் புதுவித வழக்கு உ.பி.யில் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.