ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தின் கிஸ்தாரம் பகுதியில் நக்சலைட் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று காலையில் அவர்களை நோக்கி நக்சலைட்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து அங்கு இரு தரப்பிலும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 12 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் நக்சலைட் மூத்த தலைவரான கொண்டா பகுதி குழுவைச் சேர்ந்த சச்சின் மங்டுவும் அடங்குவார் என நம்பப்படுகிறது. மேலும் கொண்டாவில் கூடுதல் எஸ்.பி. ஆகாஷ் கிர்புஞ்சே கொலைக்கு காரணமாக நக்சலைட் கமாண்டரும் இதில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சுக்மா எஸ்.பி. கிரண் சவான் கூறுகையில், “காட்டிலிருந்து பாதுகாப்பு படையினர் திரும்பிய பிறகே நக்சலைட் உடல்களை முறையாக அடையாளம் காண முடியும். என்கவுன்ட்டரில் இறந்த நக்சலைட் உடல்களை தேடும் பணி தொடர்கிறது. இதில் உயிரிழந்த நக்சலைட் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.
சம்பவ இடத்திலிருந்து ஏகே-47 மற்றும் இன்சாஸ் ரக துப்பாக்கிகளை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். சத்தீஸ்கரில் நேற்று மற்றொரு சம்பவமாக, பிஜாப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 2 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து இரு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.