புதுடெல்லி: உ.பி.யின் வாராணசி, மதன்புரா பகுதியில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இங்குள்ள 14 முஸ்லிம் இளைஞர்கள், கடந்த 16-ம் தேதி மாலை கங்கை நதியின் ராஜேந்திர பிரசாத் கரைக்கு சென்றனர்.
படகில் கங்கையின் மையப் பகுதிக்கு சென்று அங்கு ரமலான் மாத நோன்பை முடிப்பது அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது. இதற்காக கோழி பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளையும் தங்களுடன் கொண்டு சென்றனர். கரையில் இருந்து தனியார் மோட்டார் படகை வாடகைக்கு எடுத்துச் சென்ற அவர்கள், கங்கையில் ரம்ஜான் நோன்பின் இப்தார் முடித்தனர். மேலும் இதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் வைரலாக்கினர்.
இது தொடர்பாக வாராணசி பாஜக இளைஞர் அணி தலைவர் ரஜத் ஜெய்ஸ்வால், நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரில், ”தாயாக கருதப்படும் கங்கையில் நடத்திய இப்தாரினால் சனாதன தர்மத்தை பின்பற்றும் இந்துக்கள் மனம் புண்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் மத நல்லிணக்கம் சீர்குலையும்” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து காட்சிப் பதிவை ஆய்வு செய்த போலீஸார், மதன்புராவை சேர்ந்த 14 இளைஞர்களையும் கைது செய்து சிறைக்கு அனுப்பினர். படகு விதிகளை படகோட்டி மீறியது தெரிய வந்தால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வாராணசி காவல் துறை உதவி ஆணையர் விஜய் பிரதாப் சிங் கூறுகையில், ”புனித நகரமான வாராணசியில் ஓடும் கங்கை நதியும் இந்துக்களின் புனித நதியாகக் கருதப்படுகிறது. வைரலான காட்சியில் அந்த இளைஞர்கள் கோழி பிரியாணியை சாப்பிட்டுவிட்டு அதன் எலும்புகளை கங்கையில் வீசுவதும் தெளிவாகப் பதிவாகி உள்ளது. எனவே இது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதா என விசாரித்து வருகிறோம்” என்றார்.