மம்தா 
இந்தியா

“கொல்கத்தா மருத்துவ மாணவியின் பெற்றோருக்கு பணம் வழங்கவில்லை” - மம்தா திட்டவட்டம்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவ மாணவி விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வரும் நிலையில், “நான், இறந்த மருத்துவ மாணவியின் பெற்றோருக்கு ஒருபோதும் பணம் வழங்கவில்லை” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியது: “நான், இறந்த மருத்துவ மாணவியின் குடும்பத்துக்கு ஒருபோதும் பணம் கொடுக்கவில்லை, இது அவதூறைத் தவிர வேறொன்றுமில்லை. நாங்கள் எப்போதும் உங்களின் பக்கம் இருப்போம் என்று அப்பெண்ணின் பெற்றோரிடம் தெரிவித்தேன். பணம் கொடுக்கப்பட்டதா என்பதை நிரூபிக்க வேண்டும்.

இப்போதே போராட்டக்காரர்கள் அனைவரும் தங்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். இதுபோன்ற போராட்டங்களால் மக்கள் அதிகப்படியான சிரமங்களை மேற்கொள்கின்றனர். இந்த விவகாரத்தில் நிச்சயமாக மத்திய அரசின் சதி உள்ளது. சில இடதுசாரிக் கட்சிகளும் இதில் ஈடுபட்டுள்ளன. இந்த விவகாரம் எங்கள் கையில் இல்லை, சிபிஐயின் கையில் உள்ளது” என்றார்.

முன்னதாக, கடந்த ஆக.9-ம் தேதி 31 வயதான முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அந்த மாணவியின் தந்தை, “போலீஸார் ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கை மூடிமறைக்க முயல்கின்றனர். பிரேத பரிசோதனைக்காக உடலை எடுத்துச் செல்லும் போது எங்களை அவர்கள் உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை. நாங்கள் காவல் நிலையத்தில்தான் காத்திருந்தோம். பின்னர், உடல் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, ​​ஒரு மூத்த போலீஸ் அதிகாரி எங்களுக்கு பணம் கொடுத்தார், நாங்கள் அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டோம்” என ஓர் அதிர்ச்சிகர தகவலை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயலை மாற்ற வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுந்தன. இது குறித்து மாநில அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தியிருந்தார். ஆனால், வினீத் கோயலின் ராஜினாமாவை மம்தா நிராகரித்ததாக சொல்லப்படுகிறது.

SCROLL FOR NEXT