புதுடெல்லி: “அனைவரையும் மன்னித்துவிடு. நீ கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று சொல்லி 13 ஆண்டாக கோமாவில் படுத்திருந்த ஹரிஷ் ராணாவுக்கு அவருடைய குடும்பத்தினர் கண்ணீருடன் பிரியா விடை கொடுத்தனர்.
டெல்லி அருகே காஸியாபாத் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ்ராணா. இவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்து வந்த நிலையில், தங்கியிருந்த விடுதியின் 4-வது மாடியில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு தவறி விழுந்தார். இதில் அவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டு 13 ஆண்டுகளாகப் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் நினைவு திரும்பவில்லை. இதையடுத்து அவரை கருணைக் கொலை செய்யக் கோரி பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
பஞ்சாப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரான ஹரிஷ் ராணா ‘கண்ணியமான முறையில் உயிரிழக்கும் உரிமையை' உச்ச நீதிமன்றமும் வழங்கியது. இந்தியாவிலேயே இத்தகைய அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில், ஹரிஷ் ராணாவின் குடும்பத்தினர் அவரோடு கடைசி 22 நிமிடங்களை கழித்த வீடியோ வெளியாகி பார்ப்போர் கண்களை குளமாக்கி வருகிறது.
அதில், ஹரிஷ் ராணாவின் தாயார் மிகுந்த சோகத்துடன் மகனின் அருகில் அமர்ந்திருக்க, பிரம்ம குமாரிகள் அமைப்பைச் சேர்ந்த ஒரு சகோதரி ஹரிஷின் நெற்றியில் திலகமிடுகிறார். படுக்கையில் இருக்கும் ஹரிஷின் தலையை கோதியபடி, “அனைவரையும் மன்னித்துவிடு. இப்போது நீ விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது, சரிதானே?" என்று அந்த சகோதரி மென்மையாக கூறுவதும் அதனை ஆமோதிப்பதுபோல் அசையாமல் படுத்திருக்கும் ஹரிஷ் தலையை மட்டும் அசைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
காஸியாபாத் நகரின் அமைதியான அந்தச் சந்தில், அசைவற்றுப்படுத்திருந்த ஹரிஷ் ராணாவின் படுக்கையைச் சுற்றி அமர்ந்து, அவரது குடும்பத்தினர் இறுதி விடை கொடுத்தனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவரது உயிர்காக்கும் கருவிகள் படிப்படியாக அகற்றப்பட்டு வரும் நிலையில், நெஞ்சை உருக்கும் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.