மும்பை: மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம் லகத்படா கிராமத்தைச் சேர்ந்த பல்ராமுக்கும் அருகில் உள்ள தனிவாரி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.
தனிவாரி கிராமத்தில் நேற்று முன்தினம் நிச்சய விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்க பல்ராம் குடும்பத்தை சேர்ந்தவர்கள் லகத்படா கிராமத்தில் இருந்து ஒரு சரக்கு லாரியில் புறப்பட்டனர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
பால்கர் மாவட்டம், மும்பை- அகமதாபாத் நெடுஞ்சாலையில் சரக்கு லாரி சென்றபோது, எதிரே வந்த மற்றொரு சரக்கு லாரி மோதியது. இதில் நிச்சய விழாவுக்கு சென்ற 13 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து லகத்படா கிராம தலைவர் பிரதீப் ஜாதவ் கூறியதாவது: பல் ராம் திருமண நிச்சய விழாவில் பங்கேற்க ஒட்டுமொத்த கிராம மக்களும் ஒரு சரக்கு லாரியில் சென்றனர். ஆனால் எதிர்பாராத சாலை விபத்தால் பெரும்பாலான வீடுகளில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த கிராமமும் சோகத்தில் மூழ்கியிருக்கிறது. பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். கடந்த இரு நாட்களாக எங்களால் எதுவும் சாப்பிட முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சாலை விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் நேற்று லகத் படா கிராமத்தில் தகனம் செய்யப்பட்டன. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டு உள்ளது.