கே.ராதாகிருஷ்ணன் 
இந்தியா

‘பட்டியலின மக்கள் வசிப்பிடங்களை காலனி என அழைக்கக் கூடாது’ - ராஜினாமாவுக்கு முன் கேரள அமைச்சர் கடைசி உத்தரவு

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: “கேரளாவில் உள்ள பட்டியலின மக்கள் குடியிருக்கும் இடங்களை இனி காலனி என அழைக்கக் கூடாது” என அமைச்சராக பணியாற்றிய கடைசி நாளில் உத்தரவு பிறப்பித்துள்ளார் கே.ராதாகிருஷ்ணன்.

பினராயி விஜயன் தலைமையிலான கேரளா அமைச்சரவையில் எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்தவர் கே.ராதாகிருஷ்ணன். இடுக்கி மாவட்டத்தில் பிறந்த இவர், இளம் வயதில் எம்எல்ஏவாக, அமைச்சராக, சட்டப்பேரவை சபாநாயகராக பணியாற்றியவர். சமீபத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் ஆலத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கேரளாவில் இருந்து வெற்றிபெற்ற ஒரேயொரு இடதுசாரி கூட்டணி எம்.பி இவர் மட்டுமே. 18 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியும், ஒரு தொகுதியில் பாஜகவும் வென்றது.

இந்த நிலையில், மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்ற ராதாகிருஷ்ணன், தனது எம்எல்ஏ பதவியையும், அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்வதற்கு முன்னதாக அமைச்சராக கடைசியாக அவர் பிறப்பித்த உத்தரவு, கேரளாவில் உள்ள பட்டியலின மக்கள் குடியிருக்கும் இடங்களை இனி காலனி என அழைக்கக் கூடாது என்பதாகும்.

கேரளாவில் பட்டியலின மக்கள் வசிக்கும் இடங்கள் "காலனி", "சங்கேதம்" மற்றும் "ஊரு" என்ற அழைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்தப் பெயர்களில் அழைக்கக் கூடாது என்றும், அந்தப் பெயர்களுக்கு மாற்றாக நகர் அல்லது வேறு பெயர்களை வைக்க வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் விரும்பும் பெயர்களை வைக்கலாம் என்று தனது கடைசி உத்தரவில் கே.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

"காலனி", "சங்கேதம்" மற்றும் "ஊரு" ஆகிய பெயர்கள் அடிமைத்தனத்தை குறிப்பதாகவும், அவமரியாதையை ஏற்படுத்துவதாகவும் உள்ளன. காலனி என்பதே அடிமைத்தனத்தின் குறியீடு. எனவே காலத்திற்கு ஏற்ப புதிய பெயர்களே வைக்க வேண்டும் என கேரள எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வெளியிட்ட அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

அமைச்சராக கே.ராதாகிருஷ்ணன் கடைசியாக பிறப்பித்த இந்த உத்தரவு வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக பேசிய கே.ராதாகிருஷ்ணன், "இந்த விஷயம் தொடர்பாக கடந்த சில காலமாகவே ஆலோசிக்கப்பட்டு வந்தது. அதன்படியே, இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது ரத்து செய்யப்பட்டுள்ளது. காலனித்துவ அடிமைத்தனத்தின் அடையாளம் தான் காலனி என்ற வார்த்தை. எனவே, இந்த பயன்பாட்டை ஒழிக்க வேண்டும் என நினைத்தோம்." என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT