புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் நிலவிவரும் கடும் வெயிலின் காரணமாக மயங்கி விழுந்த குரங்குக்கு போலீஸ்காரர் ஒருவர் சிபிஆர் செய்து அதன் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில், புலந்த்ஷாஹரில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் இருக்கும் மரத்திலிருந்து குரங்கு ஒன்று தவறி விழுந்ததை விகாஸ் தோமர் என்ற காவலர் பார்த்திருக்கிறார். இவர் சத்தாரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.
விகாஸ் தோமர் அங்கு அருகில் சென்று பார்த்தபோது அந்தக் குரங்கு மயக்கத்தில் இருப்பதை கண்டறிந்துள்ளார். உடனடியாக அதைக் காப்பாற்ற நினைத்த அவர், குரங்குக்கு சிபிஆர் செய்து அதன் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்.
இது குறித்து தோமர் கூறும்போது, “நாங்கள் அவசரநிலைகளை கையாள பயிற்சி பெற்றுள்ளோம். மனிதர்கள் மற்றும் குரங்குகளின் உடல்கள் மிகவும் ஒத்ததாக இருப்பதால், நான் குரங்கை உயிர்ப்பிக்க முயற்சித்தேன். நான் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் மார்பை இடைவிடாமல் தேய்த்து, சிறிது தண்ணீரை வாயில் ஊற்றினேன், இறுதியாக அது புத்துயிர் பெற்றது,” என்று கூறினார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தங்களது எக்ஸ் பக்கத்தில், “இந்த மனிதர் பாராட்டுக்கு தகுதியானவர்”, “கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக”, “மனிதநேயம் இன்னும் உயிருடன் இருக்கிறது” என்று வரிசையாக பதிவிட்டு வருகின்றனர்.