Published : 30 May 2024 04:32 PM
Last Updated : 30 May 2024 04:32 PM

“மோடியின் வெறுப்பு பேச்சுகளால் பிரதமர் அலுவலகத்துக்கு கண்ணியக் குறைவு” - மன்மோகன் சிங் சாடல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடி | கோப்புப் படங்கள்

புதுடெல்லி: வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளால் பிரதமர் அலுவலகத்தின் கண்ணியத்தை, பிரதமர் நரேந்திர மோடி குறைப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ள கடைசி கட்ட பொதுத் தேர்தலின்போது பஞ்சாபில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் 3 பக்கங்கள் கொண்ட கடிதத்தை மன்மோகன் சிங் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: “இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசியல் உரையாடல்களை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் மிக மோசமான வெறுப்புப் பேச்சுகளில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார்.

சொற்பொழிவின் கண்ணியத்தையும், அதன் மூலம் பிரதமர் பதவியின் ஈர்ப்பையும் குறைத்த முதல் பிரதமர் மோடி. சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது எதிர்க்கட்சியையோ குறிவைக்கும் வகையில் வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய, கண்ணியமற்ற, முரட்டுத்தனமான வார்த்தைகளை இதற்கு முன் எந்தவொரு பிரதமரும் கூறியதில்லை. வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளால் பிரதமர் அலுவலகத்தின் கண்ணியத்தை குறைக்கிறார்.

என்னைப் பற்றியும் சில பொய்களை அவர் கூறியிருக்கிறார். நான் என் வாழ்நாளில் ஒரு சமூகத்திலிருந்து மற்றொரு சமூகத்தை தனித்து பார்த்ததில்லை. பாஜக மட்டுமே அப்படி பார்க்கக்கூடிய கட்சி.

கடந்த பத்து ஆண்டுகளில் பஞ்சாபையும், பஞ்சாபியர்களையும் பழிவாங்குவதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் பாஜக அரசாங்கம் விட்டு வைக்கவில்லை. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது, டெல்லி எல்லைகளில் இடைவிடாமல் காக்கவைக்கப்பட்டதால் பஞ்சாபைச் சேர்ந்த 750 விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்தனர். அவர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட லத்திகளும் ரப்பர் தோட்டாக்களும் போதாது என்பது போல, நாடாளுமன்றத்திலும் அவர்களை பிரதமர் மோடி மிக மோசமாக தாக்கிப் பேசினார். தங்களைக் கலந்தாலோசிக்காமல் தங்கள் மீது திணிக்கப்பட்ட மூன்று விவசாயச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற ஒரே ஒரு கோரிக்கையைத்தான் அவர்கள் முன்வைத்தார்கள். விவசாயிகளின் வருமானத்தை பறிக்கும் சட்டங்கள் அவை.

பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொந்தளிப்புடன் உள்ளது. பணமதிப்பிழப்பு எனும் பேரழிவு, குறைபாடுள்ள ஜிஎஸ்டி, கோவிட் தொற்றின் போது அமலில் இருந்த வலிமிகுந்த தவறான நிர்வாகம் ஆகியவை பரிதாபகரமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளன. இதற்கு முன் இல்லாத அளவுக்கான வேலையின்மை, கட்டுப்பாடற்ற பணவீக்கம் ஆகியவை 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சமத்துவமின்மையை அதிகரித்திருக்கிறது. பாஜக அரசின் தவறான ஆட்சியால் குடும்ப சேமிப்புகள் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டன. 30 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன.

பாஜக அரசு நமது படைகள் மீது தவறான அக்னிவீரர் திட்டத்தை திணித்துள்ளது. தேசபக்தி, வீரம் மற்றும் சேவையின் மதிப்பு 4 ஆண்டுகள் மட்டுமே என்று பாஜக நினைக்கிறது. இது அவர்களின் போலி தேசியவாதத்தை காட்டுகிறது. வழக்கமான ஆட்சேர்ப்புக்கு பயிற்சி பெற்றவர்கள், வெளியேறும் ஆட்சியால் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆயுதப்படை மூலம் தாய்நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கனவு காணும் ஒரு இளைஞர், 4 வருடங்களுக்கு மட்டுமேயான பணி என்பதால் அதில் சேர்வது குறித்து ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். அக்னிவீரர் திட்டம் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே அக்னிவீரர் திட்டத்தை ரத்து செய்வதாக காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது" என்று மன்மோகன் சிங் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x