அமித் ஷா | கோப்புப் படம். 
இந்தியா

தேர்தல் பத்திர விவகாரம்: “சரியாக கணக்கு பார்க்கவும்” - அமித் ஷா கண்டனம் @ எதிர்க்கட்சிகள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேர்தல் பத்திர விவகாரம் தேர்தலுக்கு முன்னர் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கான நிதி வழங்கலில் கருப்புப் பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரங்கள் முறை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

தனியார் ஊடக கருத்தரங்கில் கலந்து கொண்ட அமித் ஷா, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் முதன்முறையாக தேர்தல் பத்திரங்கள் பற்றி தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது: அரசியல் கட்சிகளுக்கான நிதி வழங்கலில் கருப்புப் பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரங்கள் வாங்கும் முறை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

இப்போது உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்களுக்கு தடை விதித்துள்ளதால் மீண்டும் கருப்புப் பணம் நன்கொடையாக மாறும் வாய்ப்பு உருவாகும். முன்னதாக கட்சிகளுக்கான நிதி ரொக்கமாக வழங்கப்பட்டன. ஆனால் தேர்தல் பத்திரங்கள் அமலாக்கப்பட்ட பின்னர் நிறுவனங்களோ, தனி நபர்களோ காசோலையாக மட்டுமே அதனை அளிக்க வேண்டியிருந்தது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாரதிய ஜனதா கட்சி பெருமளவில் ஆதாயம் பெற்றதுபோல் ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திகூட “தேர்தல் பத்திரங்கள் உலகின் மிகப் பெரிய கொள்ளை” என்றெல்லாம் விமர்சித்துள்ளார். இப்படியெல்லாம் அவருக்கு யார் எழுதிக் கொடுக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

உண்மையில் பாஜகவுக்கு ரூ.6000 கோடி தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்குக் கிடைத்தத் தொகை ரூ.20 ஆயிரம் கோடி. அப்படியென்றால் எஞ்சிய ரூ.14 ஆயிரம் கோடி எங்கே சென்றது. எதிர்க்கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஈட்டியுள்ள நிதியானது மக்களவையில் அவர்களின் பிரதிநிதித்துவத்தோடு சற்றும் ஒத்துப்போகவில்லை.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி ரூ.1600 கோடி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.1400 கோடி பெற்றுள்ளது. பிஆர்எஸ் கட்சி ரூ.775 கோடி பெற்றுள்ளது. திமுக ரூ.649 கோடி பெற்றுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் திட்டம் அமலான பின்னர் கட்சிகளுக்கான நிதியில் ரகசியம் என்பதே இல்லாமல் போனது. காரணம் நிதி வழங்கியவர், நிதி பெறுபவர் இருவரின் வங்கிக் கணக்கில் நன்கொடை விவரம் இடம்பெறுகிறது.

பணமாக தேர்தல் நிதி வழங்கப்பட்ட காலத்தில் ரூ.100-ஐ கட்சிக் கொடுத்துவிட்டு ரூ.1000 வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். காங்கிரஸ் இதை பல ஆண்டுகளாக செய்துவந்தது.

முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை), தேர்தல் பத்திர விவரங்கள் அனைத்தையும் வெளியிட உத்தரவிட்டும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஏன் முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கவில்லை. தேர்தல் பத்திரங்களை வாங்கியது யார்? எந்த தேதியில் வாங்கினார்கள்? எவ்வளவு தொகை கொடுத்து வாங்கினார்கள்? எந்த அரசியல் கட்சி எந்த தேதியில் குறிப்பிட்ட தேர்தல் பத்திரங்களை பணமாக மாற்றிக் கொண்டது என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளியிட மிக தெளிவான உத்தரவை பிறப்பித்திருந்தோம்.

இருந்த போதிலும், தேர்தல் பத்திரத்தின் எண்களை ஏன் எஸ்பிஐ தரப்பு வழங்கவில்லை. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி தரப்பில் விளக்கம் அளிக்க வழக்கறிஞர்கள் ஆஜராகி இருக்க வேண்டும். இந்த விசாரணையின்போது எஸ்பிஐ தரப்பில் யாரும் இல்லாதது கடும் கண்டனத்துக்குரியது என உச்ச நீதிமன்றம் வன்மையாகக் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாடு ஒரே தேர்தல்: தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்ததுபோல், அமித் ஷா ஒரெ நாடு ஒரே தேர்தல் பற்றியும் அந்நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்தார். இது குறித்து அமித் ஷா, “ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த பிரதமர் மோடி ஏன் ஆர்வம் காட்டுகிறார் என்றால் அதன்மூலம் தேசத்தில் அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவதும் அதற்கான செலவினங்களை குறைப்பதும் தடுக்கப்படும். மேலும் மக்களுக்கான வளர்ச்சித் திட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதால் தடை படாது. மக்களும் தேர்தலில் தங்கள் நேரத்தை அடிக்கடி வீணாக்க வேண்டியிருக்காது” என்றார்.

இந்தியாவில் 1967 வரை 4 தேர்தல்கள் மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. ஆனால் 1968-69-ல் சில மாநிலங்களில் அரசுகள் கலைக்கப்பட்டதால் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. மேலும் மக்களவையும் 1970-ல் அதன் பதவிக் காலத்திற்கு ஓராண்டுக்கு முன்னதாக கலைக்கப்பட்டது. 1971-ல் இடைக்கால தேர்தல் நடத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை சந்திக்கும் நடைமுறை சீர்குலைந்தது.

இந்நிலையில் ‘ஒரே நாடு ஒரேதேர்தல்’ திட்டம் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு கடந்த 2-ம் தேதி குழு அமைத்தது. அந்தக் குழு அண்மையில் குடியரசுத் தலைவரிடம் தனது பரிந்துரைகள் கொண்ட அறிக்கையை சமர்ப்பிப்பது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

SCROLL FOR NEXT