போபால்: மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டம், பராஜ் கிராமத்தை சேர்ந்த ஆண்கள் பலர் நேற்று முன்தினம் இரவு அங்கு விற்கப்பட்ட கள்ளச்சாரயத்தை வாங்கி குடித்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு குமட்டல், வாந்தி போன்ற உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. அவர்களை குடும்பத்தினர் உடனடியாக பண்டா சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதேபோல அருகில் உள்ள 2 கிராமங்களில் இருந்தும் இதே பிரச்சினையுடன் பலர் அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரிக்கும், சாகரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சாகர் மருத்துவமனையின் தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் தேவேஷ் பதேரியா கூறும்போது, ‘‘கள்ளச் சாராயம் குடித்தவர்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுக்களை அனுப்பி உள்ளோம்.
உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 24 முதல் 48 மணி நேரத்தில் எந்த வகையான மதுபானத்தை அருந்தி இருந்தாலும், மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்'' என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “கள்ளச் சாராய விவகாரத்தில் உடனடியாகச் செயல்படவும், மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், முழுமையான விசாரணை நடத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற சம்பவங்களை எங்கள் அரசு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது” என்றார்.