லக்னோ: உத்தர பிரதேசத்தின் பிலிபித் பகுதியை சேர்ந்த 12 பேர், சில மாதங்களுக்கு முன்பு வேலைக்காக கிர்கிஸ்தான் நாட்டுக்கு சென்றனர்.
அங்கு சென்ற பிறகு திறந்தவெளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதோடு 3 வேளையும் போதுமான உணவு வகைகளும் வழங்கவில்லை. இதனால் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப கோரிக்கை விடுத்தனர். ஆத்திரமடைந்த கிர்கிஸ்தான் ஒப்பந்ததாரர்கள், இந்திய தொழிலாளர்களை அடித்து உதைத்து அவர்களின் பாஸ்போர்ட்டை பறித்து வைத்து கொண்டனர்.
இதுதொடர்பாக சமூக வலைதளம் மூலமாக உத்தர பிரதேசத்தில் உள்ள உறவினர்களுக்கு இந்திய தொழிலாளர்கள் வீடியோ அனுப்பினர். புகாரின் அடிப்படையில் மத்திய வெளியுறவு அமைச்சகம் இந்திய தொழிலாளர்களை விரைவில் மீட்கும் என்று உத்தர பிரதேச அரசு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.