ஜெய்ப்பூர்: மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தினை அமல்படுத்தியல் நடந்த முறைகேடு தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் 25 இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை நடத்தினர்.
காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தன் மாநிலத்தில், பொது சுகாதார பொறியியல் துறை கூடுதல் செயலாளர் சுபோத் அகர்வாலுக்கு சொந்தமான இடங்கள் உட்பட ஜெய்ப்பூர் மற்றும தவுசா ஆகிய இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. அதேபோல் இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருத்தப்படும் பொறியியலாளர்கள், ஒப்பந்ததாரர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்படுகின்றன.
இச்சோதனைகள் அனைத்தும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act) கீழ் நடத்தப்படுகின்றன. கடந்த செப்.1 ஆம் தேதியும் இதுபோன்ற சோதனைகளை ராஜஸ்தானில் அமலாக்கத் துறை நடத்தியது குறிப்பிடத்தக்கது. சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக ராஜஸ்தான் மாநில போலீஸார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி இந்தச் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
முன்னதாக, பாஜக மாநிலங்களவை உறுப்பினர் கிரோடி லால் மீனா, ராஜஸ்தான் மாநிலத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தை அமல் படுத்தியதில் ரூ.20,000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக இந்தாண்டு ஜூன் மாதம் குற்றம்சாட்டியிருந்தார். அவர், மாநிலத்தில் ஜல் ஜீவன் திட்டத்தினை அமல்படுத்துவதில் இரண்டு நிறுவனங்களுக்கு போலி அனுபவச் சான்றிதழ்களின் அடிப்படையில் ரூ.900 கோடி மதிப்பிலான 48 திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று கூறியிருந்தார்.
ஜல் ஜீவன் திட்டமானது குழாய் இணைப்பு மூலமாக அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான, போதுமான குடிநீ்ர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. ராஜஸ்தானில் இந்தத்திட்டம் அம்மாநில பொது சுகாதார பொறியியல் துறையால் அமல்படுத்தப்படுகிறது.
இதனிடையே கடந்த மாதத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த சிங் தோடசராவுக்கு தொடர்புடைய ஜெய்ப்பூர் மற்றும் சிகாரில் உள்ள இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அதேபோல், மாநில முதல்வர் அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாடுக்கு அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் சம்மன் அனுப்பியது. இச்சோதனைகள் நடத்தப்படும் காலம், நோக்கம் மிகவும் முக்கியமானது என்று சோதனைகள் குறித்து மத்திய அரசை காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்தது.
மொத்தம் 200 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் பேரவைக்கு இந்த மாதம் 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிச.3ம் தேதி நடைபெறுகிறது.