பாட்னா: “நாங்கள் அனைத்துக் கட்சிகளுடனும் பேசி வருகிறோம். ஆனால், காங்கிரஸ் கட்சியோ நடைபெறவிருக்கும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில்தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறது” என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் இணைந்து பாஜகவுக்கு எதிராக 'இண்டியா' என்ற கூட்டணியைக் கட்டமைத்திருக்கிறார்கள். கடந்த ஜூன் மாதம் இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூருவில் நடைபெற்றது. அப்போதுதான் 'இண்டியா' என்ற பெயரும் அந்தக் கூட்டணிக்குச் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் 28 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆனால் 'இண்டியா' கூட்டணி பலவீனமடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், பாட்னாவில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியப் பேரணியில் உரையாற்றிய பிஹார் முதல்வரும், இண்டியா கூட்டணியின் முக்கிய முகமாகக் கருதப்படுபவருமான நிதிஷ் குமார், "அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு சவால் விடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இண்டியா கூட்டணி தொடர்பாக எந்த வேலையும் நடைபெறவில்லை. நாங்கள் அனைத்துக் கட்சிகளுடனும் பேசி வருகிறோம். நாட்டின் வரலாற்றை மாற்ற முயற்சிப்பவர்களிடமிருந்து நாட்டை ஒன்றிணைத்து பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இதற்காக, பாட்னாவிலும் பிற இடங்களிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டு, இண்டியா கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது அது தொடர்பான பணிகள் அதிக அளவில் நடைபெறவில்லை. 5 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில்தான் காங்கிரஸ் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
நாங்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியை முன்னோக்கி இழுத்து செல்வதற்காக ஒன்றாக வேலை செய்து கொண்டிருந்தோம். ஆனால், அவர்கள் இப்போது இதைப் பற்றி கவலைப்படவில்லை. தற்போது ஐந்து மாநில தேர்தல் பணிகளில்தான் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே, ஐந்து மாநில தேர்தல்களுக்குப் பிறகு, அவர்களே அனைவரையும் அழைப்பார்கள்’’ என்று நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.