

பிஹார் முதல்வராக 7-வது முறையாகப் பதவி ஏற்றுள்ள நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள எல்ஜேபி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான், “ தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வராகவே தொடர்ந்து நிதிஷ் குமார் இருப்பார். அவருக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநில முதல்வராகத் தொடர்ந்து 4-வது முறையாகவும், கடந்த 20 ஆண்டுகளில் 7-வது முறையாகவும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் இன்று முதல்வராகப் பதவி ஏற்றார்.
ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் பாகு சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா , பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர்.
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான், பிஹார் மாநிலத்தில் நிதிஷ் குமாருக்கு எதிராகச் செயல்பட்டார். அவர் என்டிஏ கூட்டணியில் மட்டும் இல்லை. பிஹார் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, நிதிஷ் குமாருக்கு எதிராகச் செயல்பட்ட சிராக் பாஸ்வான் கட்சி, ஜேடியு கட்சி பல இடங்களில் தோல்வி அடையக் காரணமாக இருந்தது.
இருப்பினும் மாநிலத்தில் 3-வது இடத்தைப் பிடித்த ஜேடியு கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு சிராக் பாஸ்வான் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
“பிஹாரில் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்றதற்கு வாழ்த்துகள் நிதிஷ் குமார். இந்த அரசு அதனுடைய பதவிக் காலத்தை நிறைவு செய்யும் என நம்புகிறேன். நீங்கள் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வராக இருப்பீர்கள். எல்ஜேபி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளின் நகலை அனுப்பி இருக்கிறேன்.
அதில் கூறப்பட்ட வாக்குறுதிகளின்படி செயல்படுவீர்கள் என நம்புகிறேன். பாஜக மீண்டும் உங்களை முதல்வராக ஆக்கியதற்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் ” என சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வியூக வல்லுநரும், ஜேடியு கட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான பிரசாந்த் கிஷோர் ட்விட்ரில் நிதிஷ் குமாருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அதில், “பாஜகவால் நியமிக்கப்பட்ட முதல்வராகப் பதவி ஏற்ற நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள். சோர்வுடன் மற்றும் அரசியல்ரீதியாகக் குறை கூறப்பட்ட நிலையில் முதல்வராக வந்துள்ளீர்கள். இன்னும் சில ஆண்டுகளுக்கு மந்தமில்லாத ஆட்சியை பிஹாருக்கு வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.