பக்சர்: பிஹார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே நேற்று (அக். 11) இரவு 09.35 மணி அளவில் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயிலின் 21 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிகிறது.
விபத்து நடைபெற்றுள்ள பக்சர் மாவட்டத்தின் ரகுநாத்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள பகுதியில் மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் தடம் புரண்ட நிலையில் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்.
பிஹார் அரசு தரப்பில் பக்சர் மாவட்ட ஆட்சியர், பேரிடர் மேலாண்மைத் துறை, சுகாதாரத் துறை, பக்சர் மற்றும் போஜ்பூர் மாவட்ட அதிகாரிகளிடம் விபத்து நடைபெற்ற இடத்தில் துரிதமாக செயல்பட அறிவுறுத்தி உள்ளதாக அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்த ரயில் தலைநகர் டெல்லியில் இருந்து அசாம் மாநிலத்துக்கு புறப்பட்டது. ரயில்வே சார்பில் உதவி எண்களும் அறிவித்துள்ளது. ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் மீட்புப் பணியில் தொய்வு என்றும் தகவல். இந்த தடத்தில் செல்லும் ரயில்கள் விபத்து காரணமாக மாற்றுப் பாதையில் செல்கின்றன. விபத்து நடைபெற்ற இடத்துக்கு கிழக்கு சென்ட்ரல் ரயில்வே பிரிவினர் விரைந்துள்ளதாக தகவல்.