இந்தியா

மகாராஷ்டிரா | அரசு மருத்துவமனை டீனை கழிவறையை சுத்தம் செய்யவைத்த சிவசேனா எம்.பி: போலீஸ் வழக்கு

செய்திப்பிரிவு

நான்டெட் (மகாராஷ்டிரா): நான்டெட் அரசு மருத்துவமனையின் தற்காலிக டீனை மருத்துவமனையின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சிவசேனா எம்.பி. ஹேமந்த் பாட்டீல் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

நான்டெட் பகுதியில் உள்ள ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 48 மணிநேரத்தில் 31 நோயாளிகள் இறப்பு நேர்ந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் அந்த மருத்துவமனை தற்போது இன்னொரு சர்ச்சைக்காக ஊடக கவனம் பெற்றுள்ளது. அம்மருத்துவமனையின் தற்காலிக டீன் மருத்துவர் ஷ்யாம் வகோடேவை கழிவறையை சுத்தம் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வைரலானது.

அதனைத் தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியினைச் சேர்ந்த எம்.பி., ஹேமந்த் பாட்டீல் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மகாராஷ்டிரா மருத்துவ சேவை நபர் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் (வன்முறை இழப்பு, சொத்துக்களுக்கு சேதம்) ஆகியவைகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்ன செய்தார் எம்.பி? முன்னதாக, சிவ சேனா எம்பி, தற்காலிக டீன் வகோடேவை அரசு மருத்துவமனையின் அசுத்தமான கழிவறை மற்றும் சிறுநீர் கழிக்கும் அறைகளை கட்டாயப்படுத்தி சுத்தம் செய்ய வைத்தார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. வீடியோவில் மருத்துவமனை டீனிடம் துடைப்பத்தைக் கொடுத்து கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தும் பாட்டீல், "இங்கு ஒரு சிறிய தண்ணீர் கோப்பை கூட இல்லை. ஆனால் கழிவறையைப் பயன்படுத்தாதவர்களை நீங்கள் திட்டுகிறீர்கள். உங்கள் வீட்டிலும் இப்படிதான் நடந்து கொள்வீர்களா" என்று கேட்பது பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தினைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிவ சேனா எம்.பி., "அரசு கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்கிறது ஆனால் அரசு மருத்துவமனையில் உள்ள சூழலைப் பார்த்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். கழிவறைகள் பல மாதங்களாக சுத்தம் செய்யப்படவில்லை. மருத்துவமனை வார்டுகளில் இருக்கும் கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளன. தண்ணீரும் வரவில்லை" என்று தெரிவித்தார்.

அரசியல் ஆதாயம்! எம்.பி., பாட்டீலின் செயலை மகாராஷ்டிரா மாநில மருத்துவர்கள் சங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும் எம்.பி., நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அனைவரின் முன்னிலையில் மருத்துவமனை டீன் கழிப்பறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அரசியல் ஆதாயத்துக்காக ஊடங்களில் முன்னிலையில் இது நிகழ்த்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தினைத் தொடர்ந்து மருத்துவர்களும், மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களும் நம்பிக்கையற்றும், மிகுந்த விரக்தியிலும் உள்ளனர்.

மருத்துவமனையில் இருக்கும் பற்றாக்குறைகளுக்கு மத்தியில் நோயாளிகளை கவனித்துக் கொள்வதில் எவ்வளவு சிறப்பான முயற்சிகளைச் செய்தாலும், தரமான மருத்துவ சேவையை வழங்குவதில் நிர்வாகத்தின் தோல்விக்கு மருத்துவர்கள் பலியாக்கப்படுகிறார்கள். அரசு மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த உயிரிழப்புகளுக்கு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், உயிர்காக்கும் மருந்துகளின்பற்றாக்குறையே காரணம்" என்று தெரிவித்துள்ளது.

நான்டெட் சம்பவம் போல், கடந்த ஆகஸ்ட் மாதம் மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் கால்வே எனுமிடத்தில் உள்ள சத்திரபதி சிவாஜி மஹாராஜ் மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 18 உள் நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT