மகாராஷ்டிரா | தானே மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் பலி: விசாரணைக்கு உத்தரவு

மகாராஷ்டிரா | தானே மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் பலி: விசாரணைக்கு உத்தரவு
Updated on
1 min read

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் கால்வே எனுமிடத்தில் உள்ள சத்திரபதி சிவாஜி மஹாராஜ் மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 18 உள் நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகளுக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இச்சம்பவத்துக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா என்பது குறித்து விசாரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களில் 10 பேர் பெண்கள், 8 பேர் ஆண்கள். இவர்களில் மொத்த 6 பேர் தானே, 4 பேர் கல்யாண், மூவர் சஹார்பூர், ஒருவர் பிவாண்டி, ஒருவர் உல்சாநகர் மற்றும் கோவாண்டியைச் சேர்ந்தவர்களாவர். ஒருவர் எந்தப் பகுதியைச் சார்ந்தவர் என்பது உறுதியாகவில்லை. 18 பேரில் 12 பேர் 50 வயதைக் கடந்தவர்களாவர்.

இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, "சுகாதாரத் துறை ஆணையர் தலைமையில் மாவட்ட ஆட்சியர், நகராட்சித் தலைவர், சுகாதாரத் துறை இயக்குநர் ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

உயிரிழந்த 18 பேரும், சிறுநீரகக் கல், பக்கவாதம், வயிற்றுப் புண், நிமோனியா, மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை முயற்சி, செப்டிசீமியா எனப் பல்வேறு உபாதைகளுக்காக அனுமதியாகியிருந்தனர்.

விசாரணையின்போது அவர்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை பற்றி ஆராயப்பட்டு உறவினர்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று மருத்துவமனை தலைவர் தெரிவித்துள்ளார்.

நிலைமையை சமாளிக்க மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர் தயார் நிலையில் இருக்கின்றனர். பிரதேப் பரிசோதனையையும் துரிதப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

மாநில சுகாதார அமைச்சர் சாவந்த் கூறுகையில், "மருத்துவமனையின் டீன் இரண்டு நாட்களில் நடந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in