புதுடெல்லி: தஞ்சை பெரிய கோயில் படத்துடன் கூடிய 1,000 ரூபாய் நோட்டு போலியானது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 1954 மற்றும் 1975-களில் வெளியிடப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகளில் தஞ்சை பெரிய கோயிலின் புகைப்படம் அச்சிடப்பட்டு இருந்தது. கள்ளநோட்டு களை கட்டுப்படுத்த கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் முழுமையாக வாபஸ் பெறப்பட்டன.
இதன்பிறகு புதிய 500 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன. தற்போது 10, 20, 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. இந்த சூழலில் தஞ்சை பெரிய கோயில் படம் அச்சிடப்பட்ட புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்திருப்பதாக படங்களுடன் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “புதிதாக 1,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் விடப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இது போலியானது. புதிய 1,000 ரூபாய் நோட்டு குறித்து ரிசர்வ் வங்கி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்வது அவசியம்” என கூறப்பட்டுள்ளது.