கொகிமா: நாகாலாந்து மாநிலம் டியூன்சாங் மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்த 10 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் காவல் துறைத் தலைவர் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 1989-ல் கிறிஸ்தவ மற்றும் சமூக அமைப்புகளின் கோரிக்கையால் குடும்ப வன்முறையைக் குறைக்கவும், சமூக மாற்றத்தைக் கொண்டுவரவும் ‘நாகாலாந்து முழு மதுவிலக்கு சட்டம்’ உருவாக்கப்பட்டு 1990-ல் அமலானது. ஆரம்பத்தில் கிராமக் குழுக்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளின் ஆதரவால் இது வெற்றி பெற்றதாகக் கருதப்பட்டது.
ஆனால் 35 ஆண்டுகளுக்குப் பின் இச்சட்டம் தோற்றுவிட்டதாக நாகாலாந்து கலால் துறை ஆலோசகர் மொவாதோஷி லோங்குமர் சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டார்.
கோஹிமா நகரில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத மதுக்கடைகள் இயங்குவதும், அசாம் எல்லையிலிருந்து கடத்தப்படும் போலி மதுவால் இளைஞர்களின் உயிரிழப்பு, போதைப்பழக்கம் அதிகரிப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில்தான், டியூன்சாங் மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து 10 பேர் உயிரிழந்த அதிர்ச்சித் தகவல் வெளியானது. இதையடுத்து, நாகாலாந்து டிஜிபி ரூபின் சர்மா கடுமையான எச்சரிக்கை விடுத்து, நிலைமை சீராகும் வரை டியூன்சாங் உள்ளிட்ட 7 மாவட்ட மக்களும் பிற பகுதியினரும் மது அருந்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, தனிநபர் குடிப்பழக்கத்தை அரசு தடுக்க முடியாது என்றும் தேவை உள்ளவரை விநியோகம் இருக்கும் என்றும் அம்மாநில முதல்வர் நெய்பியு ரியோ கூறியுள்ளார். இதனிடையே, தோல்வியடைந்த மதுவிலக்குச் சட்டத்தை ரத்து செய்துவிட்டு, வயது வரம்பு உள்ளிட்ட கடுமையான விதிகளுடன் கூடிய புதிய உரிம முறையைக் கொண்டுவர வலியுறுத்தப்பட்டு வருகிறது.