வினேஷ் சந்தேல்
புதுடெல்லி: அரசியல் ஆலோசனை வழங்கும் ஐ-பேக் நிறுவனத்தில் ரூ.50 கோடி அளவுக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஐ-பேக் நிறுவன இயக்குநர் வினேஷ் சந்தேலை 10 நாள் அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிக்கு ஆலோசனை வழங்கவும், தேர்தல் நேரத்தில் வழி நடத்தவும் ஐ-பேக் அரசியல் ஆலோசனை நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த ஐ-பேக் நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், இயக்குநராகவும் இருப்பவர் வினேஷ் சந்தேல். இந்நிலையில் அண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், ஐ-பேக் நிறுவனத்தின் மீது ஒரு வழக்குப் பதிவு செய்தனர். அதில் ரூ.50 கோடி அளவுக்கு சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து நிறுவனத்தில் 33 சதவீத பங்குகளை வைத்துள்ள வினேஷ் சந்தேலை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஷெபாலி பர்னாலா, வினேஷ் சந்தேலை 10 நாள் அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இந்நிலையில் இந்த வழக்கு அரசியல் உள் நோக்கம் கொண்டது என்று வினேஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் பஹ்வா தெரிவித்தார்.