புதுடெல்லி: சுவிட்சர்லாந்தின் ஐக்யூ ஏர் நிறுவனம் 'உலக காற்றுத் தர அறிக்கை 2025'-ஐ நேற்று முன்தினம் வெளியிட்டது. 143 நாடுகளில் உள்ள சுமார் 10,000 நகரங்களில் இருந்து தரவுகளைத் திரட்டி இந்த அறிக்கை உருவாக்கப்பட்டது.
இதன்படி, உலகில் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் உத்தர பிரதேசத்தின் காசியாபாத் அருகே உள்ள லோனி நகரம் முதலிடம் பிடித்துள்ளது. லோனி நகரத்தில் காற்றில் உள்ள நுண்ணிய துகள்களின் (PM2.5) அளவு ஒரு கன மீட்டருக்கு 112.5 மைக்ரோகிராம் ஆகப் பதிவாகியுள்ளது. இது உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பான அளவை விட 22 மடங்கு அதிகமாகும்.
இந்தப் பட்டியலில் பிர்னிஹட் (மேகாலயா) 3ம் இடத்தையும் புதுடெல்லி 4ம் இடத்தையும் பிடித்துள்ளன. உலகளவில் மிகவும் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தான் முதலிடத்திலும், வங்கதேசம் மற்றும் தஜிகிஸ்தான் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.