கோவை அருகே சிறுமுகை பெத்திக்குட்டையில் அமைக்கப் பட்டுள்ள வன உயிரின சிகிச்சை மையம்.
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம் அருகே சிறுமுகை பெத்திக்குட்டையில் தொடங்கப்பட்ட வன விலங்கு மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்துக்கு வன உயிரின ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை மோதூர் வனப்பகுதியில் 120 ஏக்கர் பரப்பளவில் ரூ.19.50 கோடி மதிப்பீட்டில் வன விலங்கு மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு காயமடைந்த, நோய் வாய்ப்பட்ட உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை, மான், சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்குகளுக்கு தேவையான சிகிச்சைகளும், குணமாகும் வரை மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்க தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும், வன விலங்குகளுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன அறுவை சிகிச்சை அரங்கம், மருத்துவ சிகிச்சை கூடம், ஒவ்வொரு வன விலங்கையும் தனித்தனியாக வைத்து பராமரிக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரிய மற்றும் சிறிய அளவிலான யானைகளை அடைத்து பராமரிக்கும் கரோல்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், அடர்ந்த வனப்பகுதியில் இந்த சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதால் பிற வன விலங்குகள் மையத்திற்குள் நுழையாத வகையில் சுற்றிலும் அகழி வெட்டப்பட்டுள்ளதோடு அகழியை ஒட்டி இரு அடுக்குகளாக தொங்கு சோலார் மின்வேலிகளும் அமைக்கப் பட்டுள்ளன. ஐம்பதிற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
காயமடைந்த, நோய்வாய்ப்பட்ட, உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை உள்ளிட்ட வன விலங்குகளை மீட்கும் வகையில் ஒரு பெரிய அளவிலான மீட்பு வாகனங்கள் மற்றும் இரண்டு சிறிய அளவிலான மீட்பு வாகனம் தேவையான வசதிகளுடன் கொண்டு வரப்பட்டு இந்த மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதை வன உயிரின ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக வன உயிரின ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டதை வரவேற்கிறோம். இம்மையத்தில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள் மற்றும் பணியாட்களை நியமித்து, போதிய மருந்துகளை இருப்பு வைத்து முறையாக பராமரிக்க வேண்டும்’’ என்றனர்.