சுற்றுச்சூழல்

COP31 பருவநிலை மாநாடு தோல்வி அடைய காரணங்கள் என்னென்ன? - ஒரு தெளிவுப் பார்வை

போத்தி ராஜ்.க

துருக்கியின் அன்டால்யா நகரில் நடந்த, மிக நீண்ட நேரம் நீடித்த ஐக்கிய நாடுகள் சபையின் 31-வது பருவநிலை மாற்ற மாநாடு (COP31), எந்தவொரு முக்கிய முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது.

நவம்பர் 9 தொடங்கி 20 வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இம்மாநாடு, கூடுதலாக 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. சுமார் 190-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றும், புதைபடிவ எரிபொருட்களைக் கைவிடுவது குறித்த ஒரு வரியைக்கூட இறுதி அறிக்கையில் சேர்க்க முடியவில்லை.

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் பொருளாதாரப் பிடிவாதமும், வளர்ந்த நாடுகளின் நிதி ஒதுக்கீட்டுத் தயக்கமும், வளரும் நாடுகளின் வளர்ச்சித் தேவைகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

புவி வெப்பமடைவது 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அபாய வரம்பைத் தாண்டிவிட்டதை ஐக்கிய நாடுகள் சபையும் விஞ்ஞானிகளும் எச்சரித்த பின்பு நடந்திருக்கும் இந்த மாநாட்டில், உலகத் தலைவர்கள் ஒருமித்த கருத்தை எட்டத் தவறியிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கடந்த 2009 கோபன்ஹேகன் மாநாட்டிற்குப் பிறகு, எந்தவொரு ஒப்பந்தமும் இல்லாமல்  ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாநாடு தோல்வியடைவது இதுவே முதல் முறை! 

இந்த மாநாடு, பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் துபாய் மாநாட்டின் முடிவுகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வரலாற்றிலேயே மிக நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும் தோல்வியே மிஞ்சி இருக்கிறது. 

வெப்ப அலைகள், வறட்சி, வாழ்வாதார இழப்புகளால் மக்கள் தவித்துவரும் நிலையில், முரண்பாடுகளாலும் ஈகோவினாலும் நாடுகள் விலகி நின்றது எதிர்காலத் தலைமுறைக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாக பார்க்கப்படுகிறது. பருவநிலை மாற்றம் என்பது வெறும் சூழலியல் சிக்கல் மட்டுமில்லை. அது பொருளாதாரம், எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் அதிகார அரசியலோடு பின்னிப் பிணைந்த களம் என்பதை COP31 மீண்டும் நிரூபித்துள்ளது.

மாநாட்டு தோல்விக்கான காரணங்கள்:

பருவநிலை மாநாடுகளில்,  வாக்கெடுப்பு இன்றி அனைத்து நாடுகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே ஒப்பந்தம் நிறைவேறும்; ஒரு நாடு எதிர்த்தாலும் அது தோல்வவியைத்தான் தழுவும். 

புதைபடிவ எரிபொருள் நீக்கம்:

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் ‘புதைபடிவ எரிபொருட்களிலிருந்து வெளியேறுதல்’ என்ற வாசகமே இறுதி வரைவு அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டது.

நிதி ஒதுக்கீடு ஏமாற்றம்:

வளர்ந்த நாடுகளால் ஏற்பட்ட பாதிப்பை ஈடுசெய்ய, பருவநிலை நிதி மற்றும் தழுவல் நிதியில்  தெளிவான இலக்குகளும் உடன்பாடும் எட்டப்படவில்லை.

1.5°C வரம்பு மீறல்:

வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என ஐ.நா. உறுதிப்படுத்திய பிறகு நடந்த இந்த முதல் மாநாட்டிலும், பலவீனமான ஒப்பந்தத்தை ஏற்கப் பல நாடுகள் மறுத்தன.

‘புதைபடிவ எரிபொருள்’ - வார்த்தை இல்லை:

இறுதி அறிக்கையில் ‘புதைபடிவ எரிபொருட்கள்’ என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் நடந்த 28-வது மாநாட்டில்தான் முதல் முறையாகப் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து படிப்படியாக விலகிக்கொள்ள நாடுகள் ஒப்புக்கொண்டன. கடந்த ஆண்டு பிரேசிலில் நடந்த 30-வது மாநாட்டில் சவுதி அரேபியாவும் ரஷ்யாவும் இணைந்து அதைத் தடுத்தன. இந்த மாநாட்டிலும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் எதிர்த்தன.

மாநாட்டை நடத்திய துருக்கி மற்றும் ஆஸ்திரேலியத் தலைவர்களும் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வர ஆர்வம் காட்டவில்லை. மாநாட்டின் தொடக்கத்தின் போதே துருக்கியில் 2 பிரமாண்ட கச்சா எண்ணெய் வயல்கள் திறக்கப்படுவதாக அதிபர் எர்டோகன் அறிவித்தார்.

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸும், பசிபிக் நாடுகளின் ஆபத்தைக் கூறிய போதிலும், நிலக்கரி மற்றும் எரிவாயுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்துவதாக எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை.

நாடுகளின் லாப நஷ்ட கணக்கு:

முதல் வரைவு அறிக்கையில் இடம் பெற்றிருந்த ‘புதைபடிவ எரிபொருட்களிலிருந்து வெளியேறுதல்’ என்ற வார்த்தை, எண்ணெய் வள நாடுகளின் அழுத்தத்தால் இறுதி வரைவில் இருந்து நீக்கப்பட்டது.

புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் கைவிடக் கோரி ஐரோப்பிய ஒன்றியம் (EU), இங்கிலாந்து, பனாமா மற்றும் பல வளரும் நாடுகள் வலியுறுத்தின. ஆனால், சவுதி அரேபியா, ரஷ்யா மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகள் இந்த வார்த்தையை நீக்கக் கோரின.

கச்சா எண்ணெய் வள நாடுகளுக்குப் புதைபடிவ எரிபொருட்களே பிரதான வருவாய் ஆதாரமாக உள்ளன. மறுபுறம், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு மலிவான எரிசக்தி தேவைப்படுகிறது. மாற்று எரிசக்திக்கு மாற வளர்ந்த நாடுகள் போதிய நிதி உதவி செய்யாததால், உடனடியாகப் புதைபடிவ எரிபொருட்களைக் கைவிட அவை தயங்குகின்றன.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ள வளர்ந்த நாடுகள் திருப்பிச் செலுத்தத் தேவையில்லாத மானியங்களாக நிதி வழங்க வேண்டும்; ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 120 பில்லியன் டாலர் நிதி உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் ஆப்பிரிக்க நாடுகள் கோரின. இறுதி வரைவில் அத்தொகை நீக்கப்பட்டதால் அவை உடன்படிக்கையை நிராகரித்தன.

பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க நாடுகள் ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்த இம்மாநாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்தத் தோல்விக்குப் பிறகு பேசிய ஆஸ்திரேலிய அமைச்சர் கிறிஸ் போவன், “கடக்க முடியாத சிவப்புக் கோடுகள் இருந்ததாகக் கூறினாலும், நிஜ உலகில் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகும் மாற்றம் தவிர்க்க முடியாதது” எனத் தெரிவித்தார்.

மாநாட்டின் முடிவுகள்:

முக்கிய அரசியல் ஒப்பந்தமான ‘அன்டால்யா உடன்படிக்கை’ நிராகரிக்கப்பட்டு தோல்வி அடைந்தது; ஆனால், தொழில்நுட்ப ரீதியான சில துணை முடிவுகள் ஏற்கப்பட்டன. முக்கிய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டாலும், 2015 பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் COP28 முடிவுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.

பேரிடர் தாக்குவதற்கு முன்பே நிதி பெறுதல், ஆரம்பகால எச்சரிக்கை அமைப்புகள், தொழில்நுட்பப் பரிமாற்றம், விவசாயம் மற்றும் மீத்தேன் குறைப்பில் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் சில முன்னேற்றங்கள் எட்டப்பட்டன.

இந்தியாவின் நிலைப்பாடு:

வரலாற்றுப் பொறுப்பை வளர்ந்த நாடுகள் தட்டிக் கழிக்கக் கூடாது என்றும், பாரிஸ் ஒப்பந்தத்தின்படியே இலக்குகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்தது. வாக்குறுதி  அளித்த நிதியை நேர்மையாகவும் விரைவாகவும் வழங்க வேண்டும் என அமைச்சர் பூபேந்தர் யாதவ் வலியுறுத்தினார்.

2035-க்குள் 35 சதவீதம் முழுமையான மின்மயமாக்கல் என்ற துருக்கியின் உறுதிமொழியில், நிதியுதவி உத்தரவாதம் இல்லாததால் இந்தியா கையெழுத்திட மறுத்தது. கட்டாய இலக்குகளைத் திணிக்காமல் ஒவ்வொரு நாடும் தங்கள் சூழலுக்கு ஏற்ப இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்றும், ‘கார்பன் எல்லை வரி’ (CBAM) வளரும் நாடுகளின் ஏற்றுமதியைப் பாதிக்கிறது என்றும் இந்தியா வாதிட்டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT