சுற்றுச்சூழல்

பண்ணவாடிக்கு செங்கால் நாரை பறவை வருகை: 2018-க்குப் பிறகு 2-வது முறை!

செய்திப்பிரிவு

சேலம்: மேட்டூர் அருகே பண்ணவாடிக்கு, 2018-ம் ஆண்டுக்குப் பிறகு 2-வது முறையாக அரிய வகை வலசைப் பறவையான செங்கால் நாரை வந்துள்ளது.

பண்ணவாடிக்கு அரிய வகை வலசைப் பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. இவற்றைப் பதிவு செய்வதற்காகப் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பறவை ஆர்வலர்கள் வருகின்றனர். இந்நிலையில், செங்கால் நாரையின் வருகையைப் பறவை ஆர்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சிறகுகள் மற்றும் இயற்கை ஆராய்ச்சி கழகத்தினர் கூறியதாவது: நாரைகளில் பல வகைகள் இருந்தாலும், செங்கால் நாரை தனித்துவம் வாய்ந்தது. ஐரோப்பாவில் நிலவும் கடுங்குளிர் மற்றும் உணவுத் தேவை காரணமாக, இந்தப் பறவை மிதவெப்ப மண்டல நாடுகளுக்கு வலசை வருகிறது.

14-ம் நூற்றாண்டிலேயே இந்தப் பறவை குறித்துப் புலவர்களால் பாடப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலிருந்து வலசை வரும் இப்பறவையைச் சத்திமுத்தப் புலவர், ‘நாராய் நாராய் செங்கால் நாராய்’ என்ற தொடக்க வரியுடன் பாடியுள்ளார்.

நிகழாண்டு வலசைக் காலத்தில் தமிழகத்தில் 3 இடங்களில் மட்டுமே செங்கால் நாரை பதிவாகியுள்ளது. அவற்றில் பண்ணவாடியில் மட்டும் 3 செங்கால் நாரைகள் காணப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் பொதுவாக ஒரு பறவை மட்டுமே பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அரிதாகக் காணப்படும் இப்பறவை, பண்ணவாடிக்கு 2018-ம் ஆண்டுக்குப் பிறகு 2-வது முறையாக வந்துள்ளது.

மேலும், பண்ணவாடியில் 9 ஐரோப்பிய பனங்காடைகள், 300 மீசை ஆலாக்கள் மற்றும் 3 வகையான பூனைப்பருந்துகளும் பதிவாகியுள்ளன. அதிக எண்ணிக்கையில் வலசைப் பறவைகள் வந்துள்ளதால், பறவை ஆர்வலர்கள் ஆர்வத்துடன் அவற்றைக் கண்காணித்து வருகின்றனர், என்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT