கோப்புப்படம்

 
சுற்றுச்சூழல்

தென் மாவட்டங்களில் அசாதாரண குளிர்ச்சிக்கு காரணம் என்ன?

புவியியல் ஆய்வாளர் விளக்கம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: டிட்வா புயல் தாக்கத்தால் தென் தமிழகத்தில் அசாதாரண குளிர் வானிலை நிலவுவதற்கான காரணங்கள் குறித்து புவியியல் ஆய்வாளர் எஸ்.செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையை கடுமையாக தாக்கிய பின்னர், தற்போது தென் வங்கக்கடலில் இருந்து தமிழ்நாடு கடற்கரை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

புயலின் தாக்கத்தால், வானிலை பரிமாற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் 2 நாட்கள் இடைவிடாமல் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. மேலும், இந்த மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கடுமையான குளிர் வாட்டி வதைத்தது.

இதனால் மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடந்தனர். இந்த கடுமையான குளிருக்கான காரணங்கள் குறித்து புவியியல் ஆய்வாளரான தூத்துக்குடி வஉசி கல்லூரி புவியியல் துறை உதவி பேராசிரியர் எஸ்.செல்வம் கூறியதாவது தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்கள் கடந்த இரண்டு நாட்களாக மிகக் குளிர்ச்சியான வானிலையை அனுபவித்து வருகின்றன.

எஸ்.செல்வம்

இதற்கு காரணம் டிட்வா புயலுடன் தொடர்புடைய மிகுந்த மேக மூட்டமும், கடலோர பகுதிகளுக்கு ஊடுருவும் குளிர்ச்சியான காற்றோட்டமுமே ஆகும். இதனால் பகல் நேர வெப்பநிலை சராசரியை விட கணிசமாக குறைந்துள்ளது.

புயலுடன் சேர்ந்து வந்த அடர்த்தியான மேக மூட்டம் (Cloud Cover) காரணமாக, சூரிய கதிர்கள் நேரடியாக பூமியின் மேற்பரப்பை சூடாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கடலில் இருந்து பரிமாறும் ஈரப்பதம் மற்றும் சுறுசுறுப்பான காற்றோட்டம், வலைத்தள வெப்பநிலையை (Thermal Balance) பெருமளவில் பாதித்து, பகல் வெப்பம் உயர்வதை தடுத்துள்ளது.

புயலின் மழை வளைவுகள் (Rain Bands) தென் தமிழ்நாடு மற்றும் டெல்டா பகுதிகளுக்கு நகர்ந்தாலும், மழை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி பதிவாகவில்லை. சில பகுதிகளில் மெதுவான மழை இருந்தாலும் மிகவும் கனமழை அல்லது வெள்ளப் பாதிப்பு இல்லை.

வானிலை பரிமாற்றத்தின் காரணமாக குளிரான, மேகமூட்டமான சூழல் இன்னும் சில நாட்கள் நீடிக்கும் வாய்ப்பு அதிகம். மேலும், வானிலை ஆய்வு மையம் கடற்கரை பகுதிகளில் மணிக்கு 70 முதல் 80 கி.மீ வரை காற்று வீசும் வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக 25– 26 டிகிரி செல்சியஸ் வரையிலான குளிர்ச்சியான வானிலை பதிவாகியுள்ளது. இது பொதுவாக நவம்பர் மாதத்தில் காணப்படும் 28–31 டிகிரி செல்சியஸ் என்ற சாதாரண வெப்பநிலையை விட குறைவு.

இந்த அசாதாரண குளிர்வானிலை தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக காணப்படுகிறது. இவ்வாறு எஸ்.செல்வம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT