வைகை அணை அருகே ஆக்கிரமிப்பு தாவரங்களால் மாசடைந்து கிடக்கும் குடிநீர் திட்ட நீர்த்தேக்கம்.

 

படங்கள்: என்.கணேஷ்ராஜ்.

சுற்றுச்சூழல்

மாசு தாவரங்களால் துர்நாற்ற பகுதியாக மாறிய வைகை அணையின் துணை குடிநீர் நீர்த்தேக்கம்

என்.கணேஷ்ராஜ்

ஆண்டிபட்டி: குடிநீர் திட்டங்களுக்காக வைகை அணை அருகே ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கம் மாசு தாவரங்களால் பாழ்பட்டு கிடக்கிறது. ஆகவே இவற்றை அகற்றி துர்நாற்ற நிலையை மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் முதலக்கம்பட்டி அருகில் உள்ள பிக்அப் அணையில் தேக்கப்படுகிறது. இதற்காக வைகை ஆற்றின் குறுக்கே நீண்ட தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தான் கால்வாய் மற்றும் ஆற்றுப் பகுதிக்கு என்று இரண்டு வழிகளில் 5 மாவட்டங்களுக்கான தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.

மேலும் இங்கு வருசநாடு, தேனி, செல்லம்பட்டி, ஆண்டிபட்டி, மதுரை, சேடபட்டி, வடுகபட்டி உள்ளிட்ட பல பகுதிகளின் குடிநீர் திட்டங்களுக்காக நீர் சுத்திகரிப்பு செய்து கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக ஏராளமான உறை கிணறுகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

அணையில் நீர் எவ்வளவு குறைந்தாலும் இந்த பிக்அப் அணையில் மட்டும் எப்போது தண்ணீர் தேங்கியே கிடக்கும். இந்நிலையில் இந்த நீர்த்தேக்கத்தில் ஆகாயத் தாமரைகள் அதிகளவில் படர்ந்து முழு ஆற்றையே மூடி மறைத்துள்ளது.

இந்த ஆக்கிரமிப்பு தாவரத்தால் நீர்மாசு அதிகரித்துள்ளதுடன் சூரிய ஒளி உட்புகாததால் நீர்வாழ் உயிரினங்கள், நுண்ணுயிரிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் துர்நாற்ற பகுதியாக இந்த நீர்த்தேக்கம் மாறிவிட்டது. ஆற்றில் நீர் திறக்கும் போது மட்டும் இந்த ஆகாயத் தாமரைகள் அடித்துச் செல்லப்படுகின்றன. பின்பு சில மாதங்களில் மீண்டும் இருகரைகளை தொடும் அளவிற்கு வளர்ந்து விடுகின்றன.

குடிநீர் திட்டத்துக்கு தேக்கப்படும் நீர் என்பதால் இந்த மாசு தாவரத்தை அகற்றுவதில் நீர்வளத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “இயற்கையாக கட்டுப்படுத்த குறிப்பிட்ட சில வகை மீன் வளர்ப்பு, அங்க கரைசல் தெளிப்பு உள்ளிட்டவை பெரியளவிலான இந்த நீர்த்தேக்கத்தில் பலன் தரவில்லை.

ஆகவே பிரத்யேக படகுகள், இதற்கென உள்ள இயந்திரங்களை பயன்படுத்துவதே சரியாக இருக்கும். இதற்காக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சிகளின் கழிவுநீர் கலப்பும் இதற்கு முக்கிய காரணம். ஆகவே இவற்றையும் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT