கச்சத்தீவில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள அந்தோணியார் ஆலயப் பகுதி.
ராமேசுவரம்: கடல் அரிப்பினால் பாதிக்கப் பட்டுள்ள கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தை பாதுகாத்திட வேண்டும் என, இரு நாட்டு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கச்சத்தீவானது, ராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் பாக் நீரிணை கடற்பரப்பில் அமைந்துள்ளது.
ராமேசுவரத்திலிருந்து இரண்டரை மணி நேரத்திலும், இலங்கையின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து ஒன்றரை மணி நேரத்திலும் கச்சத்தீவை அடையலாம்.
கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப் பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும், மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம்.
ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி மற்றும் தொண் டியைச் சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால், கடந்த 1913-ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயம் நிறுவப்பட்டது.
ஆண்டுதோறும் கிறிஸ் தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயத் திருவிழா பிப்ரவரி 27, 28 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த மாதம் இலங்கையை தாக்கிய புயலினால், அந்நாட்டில் 643 பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும், டிட்வா புயல் அந்நாட்டில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் கச்சத்தீவையும் விட்டு வைக்கவில்லை.
அலைகள் அடித்து கரைகளில் ஒதுங்கும் குப்பை கச்சத்தீவில் குவிந்து கிடப்பதுடன், கடல் அரிப்பினால் ஒரு கரையில் இருக்கும் புனித அந்தோணியார் ஆலயமும் பாதிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 27, 28 ஆகிய 2 நாட்கள் கச்சத்தீவில் நடைபெற உள்ள அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் 8 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ள நிலையில், திருவிழாவுக்கு முன்பே கடல் அரிப்பிலிருந்து கச்சத்தீவையும், அந்தோணியார் ஆலயத்தையும் பாதுகாக்க வேண்டும் என இரு நாட்டு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.