மறைமலைநகர்: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் ஏரியில், தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட ரசாயனக் கழிவுகளை மர்ம நபர்கள் லாரியில் கொண்டுவந்து கொட்டிச் சென்றதாகப் புகார் எழுந்துள்ளது.
சுமார் 4,000 குடும்பங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரியில் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் ஏரியில் நேற்று நள்ளிரவு லாரியில் வந்த மர்ம நபர்கள் ரசாயனக் கழிவுகளைக் கொட்டிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
மேலும், கழிவுகளைக் கொட்டிய லாரியின் ஓட்டுநர், உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்து உள்ளனர். கூடலூர் ஏரிக்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சிக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொட்டிச் செல்வதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் ஏரி நீர் மாசடைவதுடன், அண்டஹ் நீரைைப் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், ஏரியைச் சுற்றிஉள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் மயில்கள், மான்கள் உள்ளிட்ட வன உயிரினங்களும் ரசாயனக் கழிவுகளால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகக் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, ஏரியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளின் தன்மையை ஆய்வு செய்து, நீரின் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும்.
ஏரியில் கழிவுகளைக் கொட்டியவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க நகராட்சி நிர்வாகமும் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.