மேகமலை ஹைவேவிஸ் தேயிலை தோட்டத்தில் வலம் வந்த காட்டுயானை.
சின்னமனூர்: சின்னமனூரில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் மேகமலை வனக்கிராமம் அமைந்துள்ளது. சுமார் 1,500 மீட்டர் உயரத் தில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதி தனியார் தேயிலை தோட்டங்களுக்குச் சொந்தமானதாகும். இங்குள்ள 7 மலைக்கிராமங்களிலும் தோட்டத் தொழிலாளர்களே அதிகம் வசித்து வருகின்றனர்.
வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை இரவு நேரப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக ஐயப்ப பக்தர்கள் சபரிமலை வனப்பாதை வழியே சென்றதால் அப்பகுதியில் உள்ள யானைகள் மேகமலை வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தன.
அவை அடிக்கடி இங்கு மலைச் சாலைக்கு வந்ததால் அவ்வப்போது சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு பின்பு அனுமதிக்கப்பட்டனர். தற்போது சபரிமலை சீசன் முடிந்தாலும் யானைகள் மீண்டும் அப்பகுதிக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஹைவேவிஸ், மணலாறு, மகாராஜாமெட்டு உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் வலம்வந்து கொண்டி ருக்கின்றன. வனத்துறையினர் கூறுகையில், இப்பகுதியில் யானைகளுக்குத் தேவையான குடிநீர், உணவு அதிகளவில் உள்ளது.
பாதுகாப்பாக உணர்வதால் அவை இங்கேயே முகாமிட்டுள்ளன. சபரிமலை சீசன் முடிந்தாலும் சில வாரங்களுக்கு பின்பே மீண்டும் அதன் வாழ்விட பகுதிகளுக்கு இடம்பெயரும், என்றனர்.