திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் தாமிரபரணியை காக்கும் வகையிலான ரூ.59 கோடி மதிப்பிலான திட்டத்தால் பயன் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக் கின்றனர். ஏற்கெனவே நீதிமன்றம் மூலம் புனரமைப்பு பணிக்கான வரைவுத் திட்டம் தயாராகி வருவதால், அத்திட்டத்தோடு மாநகராட்சியின் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் ரூ.59 கோடியில் தாமிர பரணியை காக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி சமீபத்தில் கோரப் பட்டுள்ளது. ஆனால் தாமிரபரணியை மேம்படுத்த வேண்டும் என்றால் அதில் சாக்கடை கலக்கக் கூடாது.
குறிப்பாக, பாதாள சாக்கடை சேகரிப்பு நிலையமான ராமையன்பட்டி நிலையத்திலிருந்து ஒரு சொட்டு சாக்கடை நீர் கூட மீண்டும் தாமிரபரணியில் கலக்கக் கூடாது. மாநகராட்சி பகுதியில் உள்ள பழமையான 25 மண்டபங்களை சீரமைக்க வேண்டும்.
இவற்றை செய்யாமல், அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் தாமிரபரணியில் செய்யும் தற்போதைய பணி எதிர்காலத்தில் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என்று இயற்கை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கக் கோரியும், ஆற்றங் கரையில் உள்ள மண்டபங்களை பாதுகாக்கக் கோரியும் கடந்த 2018-ம் ஆண்டு முதல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு நடத்திவரும் இயற்கை ஆர்வலர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறியதாவது:
இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. அவர்கள் கடந்த 11.03.2024-ம் தேதி தீர்ப்பு வழங்கினார்கள்.
அதில், உள்ளாட்சித் துறையினர் தாமிரபரணியில் சாக்கடை கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்டபங்கள் மற்றும் படித்துறைகளை இந்து சமய அறநிலையத்துறை சீரமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
நீதிபதிகள் ஆய்வு
ஆனால், இந்த உத்தரவினை யாரும் நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் கடந்த 10.11.2024-ம் தேதி நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் திருநெல்வேலிக்கு வந்து தாமிரபரணியில் சாக்கடை கலக்கும் இடங்கள் மற்றும் படித்துறைகளை ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்தும் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் 2.1.2025-ம் தேதி அவர்கள் மீண்டும் ஓர் ஆணை பிறப்பித்தனர். ராஜஸ்தானில் வறண்டுபோன ஓடைகளையும் ஆறுகளையும் மீட்டெடுத்து மகசேசே விருது பெற்ற நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங்கை இந்த பணிக்கு ஆணையராக நியமிக்கிறோம்.
அவர் நேரில் சென்று களப்பணி மற்றும் ஆய்வு செய்து, திட்டங்கள் செயல்படத் தேவையான விலைப்பட்டியலைச் சமர்ப்பிப்பார் என உத்தரவு பிறப்பித்தனர். அதன்பேரில் ராஜேந்திர சிங் கடந்த 4.1.2025 அன்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மேலும், தமிழக அரசு தாமிரபரணிக்கு வரைவுத் திட்டம் கொடுத்தால், மத்திய அரசு ‘ஜல் ஜீவன்’ திட்டம் மூலம் தாமிரபரணியைச் சீரமைக்க பணம் ஒதுக்கீடு செய்வதாக நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்கள்.
எனவே, பாபநாசம் முதல் புன்ன காயல் வரை விரைவில் சர்வே செய்து, திட்டம் தீட்டி, கரைகள் அமைத்து, சாக்கடை கலக்காத நதியாக, தாமிரபரணியை மாற்ற விரைவில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், பொருநை புனரமைப்பு கூட்டியக்கம் சார்பில் தாமிரபரணி தன்னார்வலர்கள் இணைந்து, தாமிரபரணிக்கான வரைவுத் திட்டத்தையும், டிஜிட்டல் வரைபடத்தையும் தயார் செய்துகொண்டிருக்கிறார்கள்.
பாழ்பட்டுக் கிடக்கின்றன
இந்நிலையில்தான், ரூ.59 கோடியில் தாமிரபரணியை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த திருநெல் வேலி மாநகராட்சி அறிவிப்பு செய்துள்ளது. இதில், சாக்கடை கலக்கும் 23 இடங்களை நவீன முறையில் சீர்ப்படுத்தி, மரம் வளர்க்கப் பயன்படுத்தாமல், பழைய திட்டம் மூலமே சாக்கடையை சுத்திகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த முறை மாநகராட்சி செயல்படுத்திய திட்டத்தினால் சாக்கடை சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் கலந்து வருகிறது.
ஆற்றுக்குள் அமைத்திருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் எந்த மேம்பாடும் இல்லாமல் அப்படியே பாழ்பட்டுக் கிடக்கின்றன. தற்போது செயல்படுத்தவுள்ள திட்டத்திலும் பயன் ஏற்படாது.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட கட்டிடங்கள், மக்களுக்கும் நதிக்கும் இடையே உள்ள தொடர்புகளைத் துண்டித்து விட்டன. | படம்: அ. ஷேக்முகைதீன் |
ரூ.59 கோடி செலவு செய்தும் தாமிரபரணி சாக்கடை நதியாகவே இருக்கும். கடைகளும், இருக்கைகளும், நிழற்கூடங்களும் தாமிரபரணியின் ஓட்டத்தைத் தடை செய்யவே செய்யும். இதனால் ஊருக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நெல்லை சந்திப்பு கூடுதல் அழிவை சந்திக்கும்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட கட்டிடங்கள், மக்களுக்கும் நதிக்கும் இடையே உள்ள தொடர்புகளைத் துண்டித்துவிட்டன. மேலும், அந்த இடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக ஆகிவிட்டன. நதியின் பல்லுயிர் பாதுகாப்புக்கு தடுப்புச்சுவர் எப்போதும் விரோதமாகவே அமையும்.
தாமிரபரணியில் வரைவுத் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி, மத்திய அரசு பணி செய்யும்போது, பாபநாசத்திலிருந்து புன்னகாயல் வரை பணி நடைபெறும். அந்தப் பணியோடு இந்தத் திட்டத்தினையும் இணைத்து, நதிக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல், பல்லுயிர்களின் வாழ்விடத்துக்கு பாதிப்பு ஏற்படாமல், சாக்கடையை நவீன முறையில் சுத்திகரிக்கும் திட்டத்தைக் கொடுத்தால் மட்டும் போதுமானது.
தற்போது சாக்கடை கலக்கும் 23 இடங்களில் இயந்திரம் மூலம் சுத்திகரித்து, அதில் உள்ள நல்ல தண்ணீர் மூலம் மரம் வளர்க்கலாம். ராமையன்பட்டி சாக்கடை சேகரிப்பு நிலையம் என்பது மொத்த மாநகராட்சியின் கழிவுக்கூடம் ஆகும்.
அந்த தண்ணீரைச் சுத்திகரிக்காமல் தாமிரபரணி ஆற்றில் விட்டுவிட்டு, இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்துவது பணத்தை விரயம் செய்வதற்கு வழிவகுக்கும். 25 கல் மண்டபங்களை பராமரித்தாலே நதி சுற்றுலாப் பகுதியாக அமைந்துவிடும். அதை விடுத்து, நவீனம் என்ற பெயரில் எந்த கட்டிடத்தையும் தாமிரபரணிக்குள் அனுமதிக்க கூடாது.
அப்படி அனுமதித்தால் நதி இதைவிடப் பன்மடங்கு பாழ்பட்டுவிடும். நதிக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பு அற்றுப்போய்விடும். அதுவும் அடுத்த வெள்ளம் வரும் வரைதான் இந்தக் கட்டிடம் நிலைக்கும். அதற்குப் பிறகு ஆற்றுக்குள் போடப்பட்ட திட்டம் எல்லாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிடும். இவ்வாறு தெரிவித்தார்.