சேலம்: எல் நினோ தாக்கத்தால், வறட்சி, வெள்ளம் என ஏதேனும் இயற்கை பேரிடர் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதால், விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்து கொள்வது பயன் தரும் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள எல் நினோ பாதிப்பால், உலக நாடுகள் பலவற்றில் வெப்ப அலை, பருவமழை பெய்வதில் பாதிப்பு, வெள்ள அபாயம், மழைக்காலத்திலும் கடுமையான வெயிலின் தாக்கம் எனத் தட்பவெப்ப மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
எல் நினோ தாக்கத்தால், இந்தியாவிலும் பாதிப்புகள் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், கோடை காலம் முடிந்தும் வெயிலின் தாக்கம் உள்ளது. இதனால், நீர்நிலைகள் வேகமாக வறண்டு கொண்டே இருக்கின்றன.
சேலம் மாவட்டத்தில் நெல், சோளம், மக்காச்சோளம், ராகி, நிலக்கடலை உள்ளிட்ட உணவுத் தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் 27,513 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மேலும், பரவலாக மரவள்ளிக் கிழங்கு, மேட்டூர் வட்டாரத்தில் வாழை, மிளகாய் எனப் பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் நீர் வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 89 ஏரிகளில் 40 ஏரிகள் வறண்ட நிலையில் உள்ளன. 30 ஏரிகள் 25 சதவீதத்துக்கும் குறைவான நீர் இருப்புடனும், 14 ஏரிகள் 50 சதவீதத்துக்கும் குறைவான நீர் இருப்புடனும் உள்ளன.
இந்நிலையில் தற்போது விவசாயிகள் பலரும் ஆடிப்பட்டம் விதைப்பு மேற்கொள்ளத் தயாராகி வருகின்றனர். ஆனால், எல் நினோ தாக்கத்தால் இனி வரும் நாட்களில் பருவமழை எதிர்பார்த்தபடி இருக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: எல் நினோ தாக்கத்தால் உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் பருவமழை பெய்வதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, விவசாயிகள் அடுத்து வரும் காலங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
பாசனத்துக்கு அதிக நீர் தேவைப்படும் பயிர் வகைகளைத் தவிர்த்து, குறைந்த அளவு நீர் தேவைப்படும் பயிர் வகைகளைத் தேர்ந்தெடுத்துப் பயிரிட முன்வர வேண்டும். வரப்புப் பாசனமாக அல்லாமல் சொட்டுநீர்ப் பாசனமாக இருந்தால் நீர்த்தேவையைச் சமாளித்து பயிர்களைக் காத்து மகசூலைப் பெற முடியும்.
ஆனால், எல் நினோ தாக்கத்தால் வறட்சி, வெள்ளம் என இருவித பாதிப்புகளுக்கும் வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து பயிர்க் காப்பீடு செய்து கொள்வது மிகவும் அவசியம். இதன் மூலம் இயற்கைப் பேரிடரால், பயிர்கள் சேதமடையும்போது காப்பீட்டுத் திட்டத்தில் இழப்பீடு பெற்றுக்கொள்ள முடியும், என்றனர்.