சுற்றுச்சூழல்

தூத்துக்குடியில் வீசியது எந்த வகை சுழல் காற்று? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

தூத்துக்குடி பகுதியில் உருவானது அபூர்வ டொர்னாடோ சுழல் காற்று என்றும், இதற்கான காரணம் குறித்தும் புவியியல் ஆய்வாளர் விளக்கம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் திடீர் சுழல் காற்று வீசியது. இதில் அந்த பகுதியில் உள்ள சுங்கச்சாவடி, தனியார் பொழுதுபோக்கு பூங்கா, கட்டிடங்கள், மரங்கள், மின் கம்பங்கள், தகவல் பலகைகள் பலத்த சேதமடைந்தன.

பொழுதுபோக்கு பூங்காவில் இருந்த 6 பேர் காயமடைந்தனர்.மேகம் சுழன்று புனல் வடிவில் கீழே இறங்குவது போல இந்த சூழல் காற்று சுற்றிச் சுழன்று வீசியது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இது டொர்னாடோ எனப்படும் அபூர்வமான சுழல் காற்று என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, புவியியல் ஆய்வாளரான தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி புவியியல் துறை உதவி பேராசிரியர் எஸ்.செல்வம் கூறியதாவது: தூத்துக்குடி பகுதியில் அரிதான சூறாவளி காற்றுச் சுழல் போன்ற (Tornado-like) வளிமண்டல நிகழ்வு பதிவாகியுள்ளது.

மாலை நேரத்தில் ஏற்பட்ட பலத்த இடியுடன் கூடிய மழை நேரத்தில், மேகத்தில் இருந்து தரை நோக்கி இறங்கும் சுழலும் தூசி தூண் (Rotating funnel/Dust column) காணப்பட்டு, அதன் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளன.

காரணம் என்ன?

அறிவியல் ரீதியாக பார்க்கும் போது, இது ஒரு சிறிய அளவிலான காற்றுச்சுழல் (Tornado) அல்லது தரைசுழற்காற்று (Landspout) வகை நிகழ்வாக இருக்கக்கூடும்.

கடலோர பகுதியாக இருக்கும் தூத்துக்குடியில் இருந்து மேல் எழுந்த அதிக வெப்பமான மற்றும் ஈரமான காற்று (Moist Maritime Air), மேல்மட்டங்களில் இருந்த குளிர்ந்த காற்றுடன் மோதியுள்ளது.

இதனால் வளிமண்டலத்தில் நிலையற்ற தன்மை (Instability) அதிகரித்து, காற்றின் திசை மற்றும் வேக வேறுபாடு (Wind Shear) மூலம் இந்த சுழற்சி உருவாகியுள்ளது. இந்த சுழலும் காற்று, மேலே எழும் காற்றலை (Updraft) மூலம் செங்குத்தாக நீண்டு, மேகத்தில் இருந்து கீழே புனல் வடிவ மேகம் (Funnel Cloud) உருவாகி, தரையைத் தொட்டபோது அது ஒரு குறுகிய கால சுழல் காற்றாக (Tornado) மாறியது.

தூத்துக்குடியில் நடந்த நிகழ்வுகளை பார்க்கையில் இது மிக நீளமான அல்லது வலுவான சுழல் காற்று (Tornado) அல்ல. மெல்லிய, குறுகிய மற்றும் பலவீனமான சுழல் மட்டுமே காணப்பட்டது.

இதில் முக்கியமானது என்னவென்றால், இந்தியாவில் இத்தகைய டொர்னாடோ சுழல் காற்று அரிதானது மட்டுமின்றி தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இத்தகைய நிகழ்வுகள் மிகவும் அபூர்வம்.

பொதுவாக இத்தகைய டொர்னாடோ சுழல் காற்று மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா பகுதிகளில் மட்டுமே அதிகமாக உருவாகின்றன. தூத்துக்குடி நிகழ்வானது, கடலோர ஈரப்பதம், அதிக வெப்பநிலை, மற்றும் பலத்த இடியுடன் கூடிய மேக அமைப்பு சேர்ந்து வந்தால், தமிழ்நாட்டிலும் அரிதாக டொர்னாடோ சுழல் காற்று (Tornado) உருவாகலாம் என்பதை அறிவியல் ரீதியாக நிரூபித்துள்ளது என்று கூறினார்.

SCROLL FOR NEXT