கட்டிடங்களாக காட்சியளிக்கும் ஊட்டி நகரம்.

 
சுற்றுச்சூழல்

கட்டிடக் காடாக மாறிவரும் நீலகிரி - கேள்விக்குறியாகும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

ஆர்.டி.சிவசங்கர்

ஊட்டி: ஆண்டுதோறும் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலில் முக்கிய அங்கம் வகிக்கும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

1980-களில் நீலகிரி திடீர் மாற்றங்களை எதிர்கொண்டது. காஷ்மீரில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குப் பின்னர் சுற்றுலா சீசன் முழு ஆண்டும் நீண்டது. ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ் நிறுவனம் காரணமாக ஊட்டி மற்றும் சுற்றுப்புறங்கள் வேகமாக வர்த்தக மயமாகின.

விலை நிலையற்ற தன்மை காரணமாக விவசாயிகள் காய்கறி சாகுபடியை விட்டு தேயிலை சாகுபடியை நோக்கி நகர்ந்தனர். இந்த மாற்றங்கள் நீலகிரியின் தனித்துவமான சூழலியலைப் பெரிதும் பாதித்தன.

நிலப்பயன்பாடு, வனச்சேதம், நகர அமைப்பு, குடிமை வசதிகள் என அனைத்து துறைகளிலும் குழப்பம் நிலவியது. இதை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியாமல் நிர்வாகமும் பொதுமக்களும் திணறினர்.

இந்தச் சூழலில், உள்ளூர் மக்கள் தன்னார்வத்துடன் தொடங்கியதே ‘சேவ் நீலகிரிஸ் இயக்கம்’. நிதி, ஊழியர்கள், அலுவலகம் எதுவுமின்றி தொடங்கப்பட்டது இந்த இயக்கம்.

வங்கி பொருளாதார நிபுணர் தர்மலிங்கம் வேணுகோபாலும், வழக்கறிஞர் பி.ஜே.கிருஷ்ணனும் இதை முன்னெடுத்தனர். இது குறித்து தர்மலிங்கம் வேணு கோபால் கூறியதாவது: 1988-ல் நடைபெற்ற ‘சேவ் நீலகிரிஸ் ரன்’ இயக்கத்தில் 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

அடுத்ததாக நடந்த 15 நாள் பாதயாத்திரை, மாவட்டம் முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை பரப்பியது. மாஸ்டர் பிளான், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம், ஆபத்தான ரோஸ் வுட் மரங்களின் பாதுகாப்பு போன்ற பல முக்கிய கொள்கை மாற்றங்களுக்கு வழிவகுத்தது.

அரசியல்–தனியார் துறைகளில் பரிந்துரைக்கப்பட்ட பல தவறான திட்டங்களை இந்த இயக்கம் தடுத்தது. வணிக வளாக ஸ்டேடியம் திட்டம், முதுமலை வனப் பரப்புக்குள் தனியார் நிறுவனம் நிறுவ முயன்ற மின் தளம், கோத்தகிரி அருகே பரிந்துரைக்கப்பட்ட நீர்மின் திட்டம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

2000-ல் தேயிலை விலை சரிந்து நெருக்கடி உண்டானபோது, அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி, தேயிலை சந்தையை நிலைநிறுத்தும் திட்டத்தையும் இந்த இயக்கம் முன்வைத்தது. 2006-ல் தொடங்கிய நீலகிரி ஆவண மையம் உலகளாவிய ஆய்வு சான்றுகளை ஒன்றிணைத்து பாதுகாக்கும் பணியை மேற்கொண்டது.

2010-ல் பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து, ‘மலைகள் மற்றும் காலநிலை மாற்றம்’ குறித்த சர்வதேச இளைஞர் முகாமை நடத்தி, 10 நாடுகளில் இருந்து 40 இளைஞர்களை ஒன்றிணைத்தது.

2013-ல் திட்ட ஆணையத்துடன் இணைந்து, இந்தியாவின் முதல் மலைக் கொள்கை வரைவை உருவாக்கும் தேசிய அளவிலான பட்டறையை நடத்தியது.

நாற்பது ஆண்டுகள் கடந்த நிலையில், நிலைமை மீண்டும் 1980-களுக்கே திரும்பியுள்ளது. நகராட்சி நிர்வாகம் கட்டுக்குள் இல்லை. குடிமை வசதிகள் போதாமை நிலை.

மாஸ்டர் பிளான் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விளையாட்டுப் பொருளாக மாறியுள்ளது. மனித-விலங்கு மோதல்கள் அதிகரித்துள்ளன.

மேலும், நீலகிரி வருடந்தோறும் சூடேறிக் கொண்டிருக்கிறது. நீலகிரியின் இயற்கைச் சூழல் மேலும் பாதிக்கப்படாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். அதற்கு புதிய அரசு ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT