கொடைக்கானலில் புல்வெளியில் படர்ந்துள்ள உறைபனி.
பழநி: கொடைக்கானலில் நேற்று குறைந்தபட்சமாக 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. வழக்கமாக கொடைக்கானலில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை உறைபனிக்காலம் நிலவும்.
கடந்த ஒரு மாதமாக இரவு முதல் அதிகாலை வரை 5 முதல் 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், பகலில் 11 முதல் 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
அதிகாலையில் புல்வெளிகள், திறந்தவெளியில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது உறை பனி படர்ந்து ‘காஷ்மீர்’ போல காட்சியளிக்கிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மட்டுமே பதிவானது. இது கொடைக்கானலின் 10-வது மிகக் குளிரான நாளாகும் என்று ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என்று அழைக்கப்படும் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைதளப் பதிவில், “பல ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலம் முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது. ஜன.21-ம் தேதி (நேற்று) கொடைக்கானலில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.
இது கடந்த 5 ஆண்டுகளில், கொடைக்கானலில் ஜனவரி மாதத்தில் பதிவான 10-வது மிகக் குளிரான நாளாகும். நடப்பாண்டில் முதல்முறையாக கடந்த 8-ம் தேதி 3.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 2-வது முறையாக நேற்று 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
மிகக் குளிரான நாளாக முதலிடத்தில் 2003 ஜன. 5-ம் தேதி உள்ளது. அன்று 0.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தென்னிந்தியாவில் உள்ள மலைவாசஸ்தலங்களில் நேற்று கொடைக்கானலில்தான் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.