அஞ்செட்டி அருகே பிலிகுண்டுலு காவிரி ஆற்றங்கரையோரம் செடி ஒன்றில் கொத்தாக இருக்கும் வலசை வந்துள்ள பட்டாம்பூச்சிகள்.
ஓசூர்: ஓசூர் வனக்கோட்டம் காவிரி வன உயிரின சரணாலயத்தில் லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் வலசை வந்துள்ளன. காவிரி ஆற்றங்கரையோரப் பகுதிகளான பிலிகுண்டுலு, ராசிமணல் பகுதிகளை வண்ணத்துப்பூச்சிகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஓசூர் வனக்கோட்டம் 1,492 சகிமீ பரப்பளவு கொண்டது. இங்கு பல்வேறு வகையான மரங்கள் மற்றும் வனவிலங்குகள், 200-க்கும் மேற்பட்ட பறவைகள், அழிந்து வரும் அரியவகை பட்டாம்பூச்சிகள் உள்ளிட்டவை உள்ளன.
இந்த வனப்பகுதியின் நடுவே காவிரி ஆறு செல்வதால் வனவிலங்குகள் மற்றும் பறவைகளின் நீர் தேவை ஆண்டு முழுவதும் பூர்த்தியாகி வருகிறது. இந்த வனத்தையும், வன உயிரினங்களையும் பாதுகாக்கும் வகையில் வடக்கு மற்றும் தெற்கு வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த வனப்பகுதிக்கு ஆண்டுதோறும் ஜூன் மற்றும் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து பட்டாம்பூச்சிகள் வலசை வருவது வழக்கம். தற்போது, கடந்த ஆண்டுகளை விட லட்சக்கணக்கான பட்டாம் பூச்சிகள் வலசை வந்துள்ளன.
இவை காவிரி கரையோரம் மற்றும் ஈரப்பதமான பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதைப் பார்க்கும்போது, திறந்தவெளியில் வண்ணங்களின் அணிவகுப்புபோல காட்சியளிக் கிறது. அதேநேரத்தில் வனச்சாலையை இவை கடக்கும்போது, வாகனங்களில் மோதி ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் சாலைகளில் உயிரிழந்து கிடப்பதை பார்க்கும் போது வேதனையாக இருப்பதாக வன உயிரின ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது: தமிழகத்தின் மாநில பூச்சியாக தமிழ் மறவன் என்னும் வண்ணத்துப்பூச்சி உள்ளது. தமிழகத்தில் 328 வகையான வண்ணத்துப்பூச்சிகள் காணப்படுகின்றன. இவை சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக் கியத்தின் குறிகாட்டிகளாக முக்கிய பங்கு வகிக்கின்றன.
குறிப்பாக தாவரங்களின் அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன. தாவர இனப்பெருக்கம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவுகின்றன. மேலும், இவற்றின் லார்வாக்கள் பறவைகள், பல்லிகள் மற்றும் சிலந்திகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவாதாரமாக விளங்குகின்றன.
இதன் வலசை பயணம் பருவகால மாற்றங்கள், வானிலை முறைகள் மற்றும் பொருத்தமான இனப்பெருக்கத்திற்கான இடங்கள் மற்றும் குளிர்கால வாழ்விடங்களைத் தேடி நடைபெறுகிறது.
வேளாண் பணிக்கு அதிகப்படியான பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதால், பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகள் அழிந்துவிட்டன. மேலும் அழிவின் விளிம்பில் உள்ள பட்டாம்பூச்சிகளைப் பாதுகாக்க வலசைக் காலங்களில் பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதை விவசாயிகள் குறைத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வனத்தில் ஈரப்பதமுள்ள நிலத்தில் அதிக அளவில் மலர்ச்செடிகளை நடவு செய்து பராமரிக்க வேண்டும். காவிரி ஆற்றங்கரை பகுதிகளான பிலிகுண்டுலு, ராசிமணல் பகுதிகளைப் பட்டாம்பூச்சிகளின் சரணாலயமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.