படம்: மெட்டா ஏஐ
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ‘எல் நினோ’ காலநிலை நிகழ்வு பற்றி உலக நாடுகள் பேசத் தொடங்கியிருக்கின்றன. காரணம், இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு எல் நினோ-வின் தாக்கம் இருக்கும் என்று சர்வதேச வானிலை ஆய்வு நிபுணர்கள் கணித்திருக்கின்றனர்.
இந்நிலையில், ‘சூப்பர் எல் நினோ’ தாக்கத்தால் உலக அளவில் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க பிராந்தியங்கள் வறட்சி, வெப்ப அலைகள், வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைப் பேரிடர்களால் கடுமையாகப் பாதிக்கப்படும் என்ற எச்சரிக்கை வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், ‘சூப்பர் எல் நினோ’ தாக்கத்தால் உணவுப் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் குறித்து சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.
எல் நினோ என்றால் என்ன?
எல் நினோ என்பது உலகம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வு. பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்புதான் ‘எல் நினோ’ என்று விஞ்ஞானிகள் விளக்கம் தருகின்றனர்.
பசிபிக் கடல்பரப்பு வெப்பநிலையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அதாவது, 7 முதல் 24 மாதங்கள் வரை அதிகமாக்கும் நிகழ்வு இது. ஸ்பானிய மொழியில் எல் நினோ என்றால் ‘சிறிய பையன்’ என்று அர்த்தம்.
இந்த எல் நினோ எவ்வளவு வலிமையானதாக இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் அதீத மழை பெய்வதோ அல்லது கடுமையான வறட்சி ஏற்படுவதோ நிர்ணயமாகும். பருவம் தப்பிய மழையும் கேடு, பருவம் தவறிய வெப்பமும் கேடு. இவை இரண்டுமே மக்கள் மீது, பொருளாதாரம் மீது பாதிப்பை ஏற்படுத்தும். அதனால்தான் உலகக் கவனம் முழுவதும் இந்த காலநிலை நிகழ்வு மீது இப்போது குவிந்திருக்கிறது.
உலக அளவில் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியம், காலநிலை மாற்ற தாக்கங்களால் அதிக பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பகுதியாக இருக்கிறது. ஏற்கெனவே இப்பகுதி ஈரான் போர் காரணமாக எரிசக்தி சிக்கலில் இருக்கிறது. இதில் எல் நினோ தாக்கமும் கைகோத்துள்ளது. காட்டுத்தீ, பெரு நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு, மீன்பாடு குறைதல் போன்ற தாக்கங்கள் தெரியத் தொடங்கியுள்ளன.
டிசம்பரில் உச்சம் தொடலாம்!
ஏற்கெனவே எரிபொருள் விலையுயர்வு, உரத் தட்டுப்பாடு என்று ஆசிய நாடுகள் பலவும் தவிக்க, எல் நினோவின் கோர முகம் டிசம்பரில் உச்சம் தொடும் என்று கணிக்கப்படுகிறது.
சிங்கப்பூரின் யூசோஃப் இஷாக் தென்கிழக்கு ஆசிய ஆய்வுகள் நிறுவனம் ( ISEAS-Yusof Ishak Institute ), எல் நினோ தென்கிழக்கு ஆசிய நாடுகள் எதிர்கொண்டுள்ள சவால்களை இன்னும் மோசமாக்கும் என்று எச்சரிக்கிறது.
உணவுப் பாதுகாப்புக்கு பாதிப்பு!
எல் நினோ ஆண்டுகளில், பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பது தெரிந்ததே. ஆனால், இந்த ஆண்டு, கடல்கள் ஏற்கெனவே சராசரியை கடந்து வெப்பமாக உள்ளன.
ஐ.நா.வின் ஆசிய - பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் பேரிடர் அபாயக் குறைப்புப் பிரிவின் தலைவரான கரெஃப் ரஃபிசுரா, காலநிலை வெப்பமடைவதால் ஆகஸ்ட் மாதத்தில் உலகப் பெருங்கடல்கள் புதிய வெப்பநிலைகளை எட்டியுள்ளன.
எல் நினோவின் தாக்கத்தால், 2027-ம் ஆண்டின் முடிவில் 4.9 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படலாம் என்று ஐ,நா.வின் சர்வதேச உணவுத் திட்டம் கணிக்கிறது.
மத்திய அமெரிக்கா, ஆப்பிரிக்காவின் தெற்கு, கிழக்கு பகுதிகள், கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு, தென்கிழக்கு ஆசியா மோசமான விளைவுகளை எதிர்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
தென் கிழக்கு ஆசியாவை எடுத்துக் கொண்டால் இந்தோனேசியாவில் காட்டுத் தீ ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்து சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஜகார்ந்தாவுக்கு நீர் விநியோகம் செய்யும் மிகப்பெரிய நீர்த்தேக்கம் வற்றிக் கொண்டிருக்கிறது.
இது குறித்து இந்தோனேசியாவின் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் எர்மா, “எல் நினோ இப்போதுதான் அதன் தீவிரப் போக்கை தொடங்கியிருக்கிறது. இது வெறும் ஆரம்பம்தான்” என்று கூறுகிறார்.
மீன்பாடு பாதிக்கும்...
குறைவான மழைப்பொழிவு, அதிக வெப்பம் ஆகியனவற்றால் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மீன்பாடு (மீன்பிடிப்பு வளம்) பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மீன் புரதம் இறைச்சி உண்போருக்கு அவசியமானதாக இருக்கிறது. மீன்பாடு குறைதல் உடல்நலத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மெக்காங் நதி ஆறு நாடுகள் வழியாகப் பாய்கிறது. மெக்காங் நதிப் படுகையில் சுரங்கம் அமைத்தல், நீர்மின் நிலையத் திட்டங்களை நிறைவேற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவையெல்லாம் சுற்றச்சூழல் மீதான அழுத்தங்கள். இப்படியான அழுத்தங்கள் எல் நினோ தாக்கத்துக்கு தீனி போடுவதாக இருக்கின்றன என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரிசி, பாமாயில் விநியோகத்துக்கு ஆபத்து
தென் கிழக்கு ஆசிய நாடுகள் வழக்கமாக ஜூன் முதல் அக்டோபர் வரை பருவமழை பெறும். அதனால் விவசாயிகள் அதன் பின்னர் நடவுக்குத் தயாராவார்கள். ஆனால் இந்தக் காலகட்டத்தில் மழைப்பொழிவு சரியாக இல்லாவிட்டால் விவசாயிகள் நடவு செய்தல் தாமதமாகும். ஒருவேளை நடவு செய்தாலும் பரப்பளவு குறையும். குறைந்த தண்ணீரில் விளையக்கூடிய மாற்றுப் பயிர்களை நடவு செய்யலாம்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அரிசி, பாமாயில் போன்ற பயிர்கள் நடவு குறைந்து அது சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்தியா, வியட்நாம், தாய்லாந்து போன்ற உலகின் மூன்று பெரிய அரிசி உற்பத்தி நாடுகள் இந்த ஆண்டு எல் நினோவால் மிகக் கடுமையாக பாதிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மலேசியா, இந்தோனேசியாவில் பாமாயில் உற்பத்தி கணிசமாகப் பாதிக்கப்படும். இந்த நாடுகள் உலகின் 85% பாமாயிலை உற்பத்தி செய்கின்றன.
பாமாயில் குக்கீஸ் தயாரிப்பு, பற்பசை, டிடர்ஜென்ட், லிப்ஸ்டிக் தொடங்கி பல்வேறு பொருட்களிலும் மூலப் பொருளாகப் பயன்படுத்தப்படுவதால் இதன் தேவை உலகம் முழுவதுமே இருக்கிறது.
இந்நிலையில், மலேசியா எல் நினோ தாக்கத்தை நவம்பரில் அதிகமாகப் பார்க்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், மலேசிய பிரதமர் எல் நினோ தாக்கத்தை குறைக்கும் வழிவகைகளை ஆராயும்படி அந்நாட்டு உணவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அரிசி, பாமாயில் மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாகவே விவசாயம் பெரும் சவாலை எதிர்கொள்ளும் என்பதால், எல் நினோ தாக்கத்தால் உலக உணவுப் பொருட்கள் சந்தையில் விலைவாசி உயர்வு 15% வரை எகிறும் என்று கோல்ட்மேன் சேக்ஸ் நிதி நிறுவனம் கணிக்கிறது.
வேளாண் உற்பத்திதான் ஒரு நாட்டின் மக்களின் செழிப்பை தீர்மானிக்கிறது. தென் கிழக்கு ஆசியாவை பொறுத்தவரை, அந்தப் பிராந்தியத்தின் வேளாண் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டால் அது நிச்சயம் உலகளாவிய அழுத்தத்தை ஏற்படுத்தும்.
மனிதன் இயற்கையின் மீதான அழுத்தங்களை குறைக்கும் வரை காலநிலை மாற்றத்தால் விளையும் தாக்கங்கள் இன்னும் மோசமடையவே செய்யும். இயற்கையுடனான போட்டியில் தோல்வி மட்டும்தான் கிடைக்கும்.